குருவானவர்!
மேடும் பள்ளமுமான
கிராமத்தில்
சரித்திரங்கள் உலவும்
பழைய வீடு.
வயல்வெளியும், சுய தொழிலும் நசுங்கிட
வருமானம் தேடி
வான் பரந்த சொந்தங்கள் .
சொத்தும் சுகமும்
பட்டங்களாய் உருவெடுக்க
மாயவித்தைக்காரராய்
மாறிப் போனார் சிலகாலம் .
மிச்சம் மீதி ஒருவனுக்கே
ஊர் மெச்ச
மங்கலம் ஊதி முடித்தவுடன்
வான் விரிந்து பறந்தன சிட்டுகள்.
கூடுவிட்டு கூடு பாய்ந்த
கலை தந்த குருவானார் சிலகாலம்.
இருட்டுக்குள் துலாவி
கையேந்தி கையேந்தி
இதய ஓட்டை இளவரசிக்கு
ஏணி கொடுக்க விழைந்து
துணி போர்த்திச்
சாய்ந்து போனார் சிலகாலம் .
அவர் மனம் போலவே
கொஞ்சம் கொஞ்சமாய்
இறந்து கொண்டிருந்தது
அந்த சரித்திர வீடு.
வைத்தியர் இல்லா ஊரில்
கை வைத்தியத்திலேயே
உயிர் ஓட விட்டார் சிலகாலம்.
இத்தனையும்
மெளனமாய் மென்று
மொக்கை வாய் சிரிக்கும்
என் அப்பாவை விட
எந்த ஜென் துறவி
குருவாய் ஆனவர்
- பாரதிசந்திரன், திருநின்றவூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.