புதிய கனவு!

மரங்களைக் கொன்றோம்
குளங்களையும் தின்றோம்...
பூமித்தாயே …நீ
துளித் துளியாய் சேர்த்து வைத்ததையும்
ஒரு சொட்டு நீரும் விடாமல்,
துளையிட்டு உறிஞ்சி விற்றுத் தீர்த்தோம்...
இனித் துளையிடுவதற்கு இடமே இல்லை…!
காசுக்கு ஆசைப்பட்டு
அன்னையே உன் எழிலாம்
அழகான மலையை வெட்டினோம்
உன்னை வெடி வைத்துத் தகர்த்து
பாளம் பாளமாக வெட்டி எடுத்து
பல துண்டுகளாக்கி மெருகூட்டி
பலநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து
எங்களின் பைகளை நிரப்பினோம்…
பல மலைகளை நாட்டு வரைபடத்தில்
காணாமல் போகச் செய்தோம்!
இன்னும் சில காலத்தில்…
இங்கெல்லாம் மலைகள் இருந்தன
என்று மட்டுமே எம்பிள்ளைகள்
பாடத்தில் படிக்கும்…
சோறு போட்ட தாயே உன்னைக்
கூறு போட்டுக் கூவிக் கூவி விற்றோம்...
குளங்களைத் தூர்த்து அதனையும்
கூறு போட்டோம்…
ஆறுகளும் குளங்கள் மலைகளைப் போன்று
காணாமல் போயின…
ஆறுகளைத் தோண்டி
மணல் அள்ளி விற்றோம்
ஆறுகள், குளங்கள் இருந்த இடங்களில் எல்லாம்
எங்களின் ஆடம்பர மாளிகைகளை அமைத்தோம்
பெருமழை பெய்த போது
வீடுகள் மிதந்தன… அய்யோ
வெள்ளம் வந்து விட்டதே
என்று புலம்பித் தீர்த்து
வெள்ள நிவாரணம் கேட்டு
மனச்சான்று இல்லாமல்
போராட்டமும் செய்தோம்…
தாயே உன் மேலாடையாய் விளங்கிய
மரங்களை எல்லாம்
மனம் போன போக்கிலே
வெட்டி வீழ்த்தினோம்
மரத்தை வீழ்த்திவிட்டு
இந்த ஆண்டு வெயில் அதிகம் தான் என்று
இதயமே இல்லாமல் எங்களுக்குள்
பேசிக் கொண்டோம்…
மழை குறைந்ததற்கு மனாவாரியாய்
இயற்கையை வசைபாடினோம்…
காலத்தைக் கெடுத்துவிட்டுக்
காலம் கெட்டுப் போச்சு என்று
பல்லவி பாடினோம்…
அனைத்தையும் செய்துவிட்டு
அன்னை பூமியை மலடாக்கிவிட்டு
அருகதையே இல்லாமல்
அரிசி விலை அதிகம் என்றோம்...
கல்லையும் மண்ணையும்
தின்னவா இயலும்...?
எமது கண்ணீர் தான் எமக்குக்
குடிநீராய் ஆகுமோ?
பிள்ளைகள் அழுகை தன்னைப்
பெற்றவள் பொறுப்பதுண்டோ?
செய்த பிழைகளுக்கு பழி தீர்க்க
அன்னையே நினைப்பதுண்டோ?
அன்னையே பூமித்தாயே
குற்ற உணர்வோடு கூனிக் குறுகி நிற்கும்
எம்மை மன்னித்து...
வருண பகவானிடம்
சற்று கருணை காட்டச் சொல்...!
ஏதுமறியா எமது இளைய தலைமுறையாவது
இனிப் பிழைத்துப் போகட்டும்....!
உன்னை உணர்ந்து உன்னைக் கெடுக்காமல்
உன்னதமாய் வாழட்டும்…
உன்னோடியைந்த புதிய உலகத்தைப்
படைக்கட்டும்… அந்த உலகம்
மறைந்த அந்தக் காலமாய் இருக்கட்டும்…
அதில் இயற்கையும் இருக்கும்…
அன்னையே நீயும் பூரித்துப் போய்
எம்மை அன்புடன் தழுவிக் கொண்டிருப்பாய்…!
- முனைவர் சி.சேதுராமன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.