நழுவவிட்ட காலங்கள்...!

உன்னை நானும்
என்னை நீயும்
விழுங்கிவிடுவதாய்க் கருதிய
எச்சரிக்கையின் இறுக்கங்களை
நம் முகங்களில் படரவிட்டு
ஒருவரையொருவர் நாம்
நம்பாமலேயே
ஒரு நீண்ட பயணம் முடித்து
விரோதத்திற்கும் நட்பிற்கும் இடையே
நாம் விலகி நின்று
ஒருவரைப் பார்த்து ஒருவர்
நட்பாகச் சிரித்துக் கொள்கையில்
கூடவே நம்மைப் பார்த்துக்
கைதட்டி சிரித்துப் போகும்
நாம் நழுவவிட்ட காலங்களும்!
கோபத்தினால் நாம் நம்மை
இழந்து விட்ட காலங்கள்
நாம் நழுவவிட்ட காலங்கள்...!
கோபத்தால் எதைப் பெற்றோம்...!
ஒன்றுமில்லை...!
நாம் இழந்ததுதான் மிச்சம்…
கோபத்தால் எழுந்த வன்மம்
நம் உண்மையான மகிழ்வையல்லவா
எடுத்துச் சென்றுவிட்டது...!
ஒருவரைப் பற்றி மற்றவர்
கூறியதைக் கேட்ட நாம்
வன்மத்தால் நம்மை
நாமே கேட்க மறந்தோம்...!
மற்றவர் கூறியவற்றை உண்மையென்று நம்பி
வீராப்பிற்காக நம்மையே நாம் இழந்தோம்...!
நம்மை நாம் நம்பாமல்
பிறர் கூறியதை வேதவாக்காக
எடுத்துக் கொண்டு ஒருவரை ஒருவர்
விழுங்குவதற்காகப் பகையை
நெஞ்சில் வளர்த்தோம்...!
வளர்ந்தது பகை...! மறைந்தது மகிழ்வு...!
நம்மை நாம் நம்பாததால்
நல்ல காலங்கள்
நம்மை விட்டு நழுவிவிட்டன...!
நாம் நழுவவிட்ட காலங்கள்
நம்மைப் பார்த்துச் சிரிக்கின்றன...!
- முனைவர் சி.சேதுராமன், புதுக்கோட்டை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.