தெரு நாயின் சோகமும் சந்தோசமும்...!
நாற்சக்கர வண்டிக்குள்
ஓட்டுனராய் நாயகன்.
பின்னிருக்கையில்
அவன் ஆசைநாயகி
அவன் பக்கத்திலோ
அவர்கள் ஆசை நாய்
வண்டி நகர
உடைந்தது...
தெரு நாயின் உள்ளம்.
என்ன தான் வாழ்க்கை
தொடர்ந்தது தெரு நாய்
வண்டி நின்றது.
நட்சத்திர விடுதி.
சரி சமமாய் வரவேற்பு
ஆசை நாய்க்கு.
இதற்கோ கல் விரட்டல்
கண்ணாடி வழியே கண்ட
காட்சிகளால் கனத்தது
இதன் நெஞ்சம் .
தனக்கும்
அந்த வாழ்வு வராதா ?
நொந்து போன
அந்தத் தெரு நாய்
தெருவுக்குத் திரும்பியது...
சக தோழர்களின்
கனிவான ஓசைக்கிடையில்
அந்த வீட்டில் கேட்டது
சங்கிலி ஓசை !
தெரு நாயின்
கனத்த இதயம் சிரித்தது
தனித்த சுதந்திரம்
தனக்கு இருக்கிறது!
- தில்லை இரா.கிருட்டிணன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.