புலம்பெயர் வாழ்க்கை…!

அன்னிய நாட்டின்
அகதிகள் நாங்கள்…
அன்னிய மண்ணில்
இரத்தம் சிந்தி அம்மண்ணில்
எரிந்து சாம்பலாகிக் கொண்டிருக்கிறோம்!
எங்களின் அடிவயிற்றில் பதிந்த
வறுமைக் கோடுகளின்
மர்மக் கரங்கள்
அறுத்தெரிந்து வீசிய
உயிருள்ள இறைச்சித் துண்டுகள் நாங்கள்…!
கண் தெரியா தேசத்தில்
கால்தெறிக்க விழுந்து
மனக் காயங்களில் தலைசாய்த்துக்
கண்ணீர் வடிக்கின்றோம்…!
மொத்தக் குடும்பத்தையும்
முதுகில் சுமந்து
இன்னும் தீர்மானிக்கப்படாத
திசைகளில் தொடர்கிறது
எங்களின் பயணம்…!
ஒவ்வொரு முறையும்
நாங்கள் வீட்டிற்கு
நலம் நலமறிய அவா
என்றுதான் கடிதம் எழுதுகிறோம்!
ஆனால் அங்கிருந்து
பணம் குறித்த விசாரிப்பே என்றும்
பதிலாய் வருகிறது…!
எங்களுக்கு மட்டும் ஏன்
பணம் பந்த பாசங்களின்
சமாதியாகிவிட்டது?
உயிரைப் பிழிந்து பிழிந்து
பாசத்தால் ஒத்தடம் தந்த
உறவுகளைப் பிரிந்து
இன்னும் எத்தனை நாட்கள்
எங்களின் தனித்து விடப்பட்ட
இத்தனித்துயர் வாழ்கை…?
ஊரில் நடந்த கலவரத்தில்
கைக் குழந்தையைத் தொலைத்த
தாயின் பதற்றத்தைப்போல
ஒவ்வொரு முறையும்
தொலைபேசியில் பேசிய
பின்னர் நாங்கள் அடையும்
மனஉளைச்சல்கள் …
வார்த்தைகளில் வடிக்கமுடியாதவை…!
எங்களில் பலருக்கு
தாம்பத்திய வாழ்க்கைகூட
தவணை முறையில்தான்
தட்டுப்படுகிறது…
தொலைபேசியிலும், கடிதத்திலும்
கொஞ்சலும், சிணுங்கலுமாய்…
தவணைமுறையில் தத்தித் தத்தி
எங்களின் இல்லறம் நடக்கிறது…
மனைவியின்
மூச்சுக் காற்று தந்த சுகம்கூட
இங்குள்ள குளிர்பதனக் காற்று
எங்களுக்குத் தருவதில்லை….!
குடும்ப விளக்குகளை
கும்மிருட்டில் தவிக்கவிட்டு விட்டு
தீக்குச்சிகளாகிய நாங்கள்
தன்னந்தனியாய்
புலம்பெயர்ந்த நாடுகளில்...
எங்களின் வாழ்க்கையின்
நிஜத்தைத் தொலைத்துவிட்டு
எப்படியாவது ஒரு வீடு கட்டும் கனவில்
இன்னும் எத்தனை ஆண்டுகள்…!
இந்தப் புலம்பெயர்ந்த நாடுகளில்…?
எங்களின் புலம்பெயர்ந்த வாழ்க்கை…!
உயிரோடு இருக்கும்
பெற்ற குழந்தைக்கு
அன்பான முத்தங்களை
அதன் புகைப் படத்தில்தான்
எங்களால் கொடுக்க முடிகிறது…!
பாசத்தின் அருமையை
உணர்வற்ற இந்தக்
காகிதங்கள் உணருமா…?
ஒவ்வொரு முறையும்
நாங்கள் ஊர் சென்று திரும்பும் போது
மரத்துப்போன எங்களின் மனதைத் தவிர
மறக்காமல் எல்லாவற்றையும்
எங்களால் எடுத்து வர முடிகிறது…!
காலத்தின் இந்த
இதயத் தடவல்கள்
எங்களைக் கட்டிப்போடாமல்
வெறும் கடிதம் போடத்தானா?
பசையாகச் செயல்படுகின்றன…!
பாலைவனத்தில் தாகத்தைத் தணிக்கத்
தண்ணீருக்காக அலையும்
ஒட்டகங்கள் போன்று நாங்கள்
வீட்டிலிருந்து வரும் கடிதங்களுக்காகக்
ஏக்கத்தோடு காத்திருக்கின்றோம்…!
கைப்பேசி இருக்கும்போது
கடிதம் எதற்கு என்று நினைக்கலாம்…
போர்க்களத்தில் தனது காதலியின்
கடிதத்ததை எடுத்து எடுத்துப்
படித்துப் பார்த்து
உற்சாகம் கொள்ளும்
நெப்போலியன் போன்று
குடும்பத்தாரின் நினைவு வரும்போது
அதனைத் தொட்டுப் படித்துப் பார்த்து
எங்களை நாங்களே
உற்சாகப்படுத்திக் கொள்வதற்காகத்தான்..!
எங்களின் வாழ்க்கை விரக்தியில் பாதி
விரகத் தீயில் பாதி எனக் கழிந்து போகின்றது…!
எரிந்து போகும் எங்களின் இளமை வாழ்க்கை
இறுதியில் நரம்புகள் அறுந்துபோய்
முகாரி பாடும் வீணைகளாக ஆகிவிடுகின்றன…!
யாருக்குப் புரியும் எங்களின்
புலம்பெயர் வாழ்க்கை…!
வெளியில் பகட்டு… உள்ளத்தில் கனப்பு…
பழத்தின் அழகைப் பாராட்டும் பலர்
உள்ளிருக்கும் வண்டின்
குடைச்சலை அறியமாட்டார்கள்…!
அந்தக் குடைச்சல்
பழத்திற்குத்தானே தெரியும்…!
புலம்பெயர்ந்து தவிக்கும் எங்களின் வாழ்க்கை
எங்களுக்கே புரியாமல் இருக்கும்போது…
பிறருக்கு எப்படிப் புரியும்…?
- முனைவர் சி.சேதுராமன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.