வருடும் நினைவுகள்!

நினைவுகள் நம்முள்
உலா வருவதனால்…
உலகம் உன்னதமானது…
உலகம் அழகாய்த் தெரிவதும்
நினைவுகளால் தான் !
நினைவுகள்தான் நித்தமும் நம்மை
உயிர்ப்பூட்டிக் கொண்டிருக்கின்றன…
மழைக்காலம்
வரும் முன் சாலைகள்
செப்பனிடப்படுவது போல்
உன் வசந்த நினைவுக்காலம்
வரும் முன் என் இதயம்…
செப்பனிடப்படுகின்றது
கவிதை எனும் கனவுகளால்
எச்சில் இலை
விழக் காத்திருந்தவனுக்கு
தலைவாழை இலை
விருந்து கிடைத்ததைப் போன்று
நினைவு மட்டும்
போதும் என்றிருந்தவனுக்கு
இன்று மீண்டும் விருந்தாய்
நம் வசந்த கால நினைவுகள்
மனத் திரையில்…
மண் கொண்டே
மட்கலயம் துலக்குவது போல்
ஒவ்வொரு நாளும்
உன் நினைவுகள் கொண்டே
என் மனதைத் துலக்கிக்
கொள்கிறேன் துப்புரவாய்…
மீண்டும் உன் நினைவுகளை
அதில் நிரப்ப
புத்தகப் பொதிச் சுமையை
இறக்கி வைக்கத் துடிக்கும்
பள்ளிச் சிறுவன் போல்…!
உன் நினைவுச் சுமையை
இறக்கி வைக்க முடியாமல்
ஏற்கனேவே நிரம்பிப் போன
கவிதை வலம் வரும் என் இதயம்…
வெடித்தப் பாலையில் விழுந்த
ஒரு சொட்டு மழைத் துளி போல்
விரிசல் கண்ட உள்ளத்தில்
விழுந்த விழி நீர்த் துளி
நினைவுகள் மீண்டும் மீண்டும் துளிர்க்க
என்னை நஞ்சென
நசுக்குவதும் உன் நினைவுகளே…!
மனக் காயத்திற்கு மருந்தென
அமைந்து இதமாய்
வருடுவதும் உன் நினைவுகளே !
என்றும் நினைவுகள்
வசந்த காலமாய்…
இதயத்தை வருடிக் கொண்டே இருக்கும்…!
- முனைவர் சி.சேதுராமன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.