தொடரும்... காத்திருத்தல்... தொடரும்!

காத்திருத்தல் என்பது…
ஒவ்வொரு நாளிலும்…
ஒவ்வொருவருக்காகவும்…
ஒவ்வொன்றிற்காகவும்…
ஒவ்வொரு மணித்துளிக்காகவும்…
தொடர்ந்து நிகழ்ந்து
கொண்டே இருக்கிறது…
ஒன்றின் காத்திருப்பு
இன்னொன்றின் வரவில் முடிகிறது…
இன்னொன்றின் வரவு
மற்றொன்றின் எதிர்பார்ப்பில் முடிகிறது…
அந்த எதிர்ப்பார்ப்பு…
காத்திருத்தலில் முடிகிறது…
கண்ணகி கோவலனுக்காகக்
காத்திருந்ததைப் போன்று…
காதலன் காதலிக்காகக்
காத்திருக்கிறான்…
மழைக்காக வாடிவதங்கும்
பயிர்கள் காத்திருக்கின்றன…
தேர்வெழுதிவிட்டு அதன் முடிவை
எதிர்நோக்கி மாணவன்
காத்திருக்கிறான்…
நாளையாவது நல்லது நடக்குமா...?
என்று பாதிக்கப்பட்டோர்
காத்திருக்கின்றனர்…
வெளியூர் செல்லும் பயணி
ஒருவன் தான் செல்லும்
பேருந்திற்காகக் காத்திருக்கிறான்…
படித்துப் பட்டம் பெற்று
வேலைவாய்ப்பு அலுவலகத்தில்
பதிந்து வைத்துவிட்டு
வேலைக்கு அழைப்பு வரும்
என்று காத்திருக்கும் இளைஞர்கள்…
பருவமெய்திய பெண்ணுக்கு
நல்ல மணமகன் வாய்க்க வேண்டுமென்று
தாய் காத்திருக்கிறாள்………
பெண்ணுக்கு மணம் முடிந்து
பெண் கருவுற்று நல்ல
குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும் என்று
பெற்றதாய் காத்திருக்கிறாள்… ...
குழந்தை பிறப்பதற்காக
மருத்துவமனையில் மனைவியைச் சேர்த்துவிட்டு
சுகப்பிரசவமாக ஆகவேண்டுமே எனக்
கணவன் காத்திருக்கிறான்… …
குழந்தை பிறந்து வளர்ந்த பின்னர்
அக்குழந்தைக்கு நல்ல பள்ளியில்
இடம் கிடைக்க வேண்டுமே
என்று பெற்றோர்கள்
காத்திருக்கின்றனர்… ...
இவ்வாறு காத்திருத்தல்
என்பது மனிதனின்
ஒவ்வொரு பருவத்திலும்
தொடர் நிகழ்வாக
தொடந்து கொண்டே இருக்கின்றது...!
நீண்ட நாள்கள் தவத்திலிருந்த
முற்றும் துறந்த முனிவரும்
இறைவனைக் காண்பதற்கு
நாள்தோறும் காத்திருக்கிறார்…
சிலரின் காத்திருப்பு
நிறைவேறுகிறது…
ஆனால் …
சிலரின் காத்திருப்போ
ஏமாற்றத்தில் முடிகிறது…
இருந்தாலும் ஏமாற்றத்தைத் தாண்டியும்
சிலரின் காத்திருப்புகள்
தொடர்கின்றன…
ஆம்! உனக்கான என்
காத்திருப்பும் தொடர்ந்து
கொண்டே இருக்கிறது…
மலரில் மணமிருப்பதைப் போன்றும்
மலரில் தேனிருப்பதைப்போன்றும்
என்னுள்ளத்தில் நீ
நிறைந்து இருக்கின்றாய்…
இருப்பினும்...
பயிர்போன்றும்
குழந்தை போன்றும்
தாய் போன்றும்
என்னுள்ளம் உனக்காகக் காத்திருக்கிறது…
இந்தக் காத்திருப்பு
எப்போது முடியும்…?
எங்கு சென்று முடியும்…?
இது எனக்கோ இல்லை உனக்கோ தெரியாது…!
இருப்பினும்
நம் காத்திருத்தல் என்பது
ஒவ்வொரு நாளும் தொடர்கிறது…
நமக்கான காத்திருத்தல்…
இப்பிறவியில் முடிவதன்று….
அடுத்த பிறவியிலும் தொடரும்…
அடுத்த பிறவியிலாவது
நமது காத்திருத்தல் என்பது
நிறைவேறும் என்ற எண்ணம்
மனதில் இதமாய்ப் பரவ…
மீண்டும் நம் மனங்களின்
காத்திருத்தல் என்பது
தொடர்கதை போல் தொடர்கிறது…
காத்திருத்தல்
கரைசேர்வதற்காகவே…
கரை சேர்ப்பதற்காகவே…
நம்முள் நாம் ஒன்றாய்க்
கரைவதற்காகவே…
அதற்காகவோ என்னவோ…
அடுத்தப் பிறவியை நோக்கி
காத்திருத்தல் என்பது தொடர்கிறது...
காத்திருத்தலும்
சுகமாய்த் தானிருக்கிறது…
அதில் நீ தினமும் உலா வருவதால்…
காத்திருத்தல்
சுகமானதும் சுமையானதும்… கூட
இருப்பினும் உனக்கான
என் காத்திருத்தல் தொடர்கிறது…
- முனைவர் சி.சேதுராமன், புதுக்கோட்டை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.