மகனுக்கு ஒரு கடிதம்!

அன்பு மகனுக்கு!
எங்களை நினைவிருக்கிறதா…?
நினைவிருக்கும் என்று நம்புகின்றேன்…
இருந்தாலும் உனக்கிருக்கும்
பல்வேறு வேலைகளில் நீ
எங்களை எப்படி நினைக்க முடியும்...?
அதனால்தான் உனக்கு நினைவுபடுத்தும்
வகையில் இக்கடிதம் எழுதுகிறேன்…
சூழ்நிலைக் கைதியாகிவிட்ட…
உன்னால் எங்களை வைத்துப் பராமரிக்க இயலவில்லை…
உனக்கு அலுவலகத்திலும் நெருக்கடி...
வீட்டிலும் நெருக்கடி…
எங்கள் மகன் மனநெருக்கடிக்கு
ஆளாகக் கூடாது என்பதற்காகத்தான்
நீ சொன்னபடி கேட்டு இந்த
முதியோர் இல்லத்தில் சேர்ந்தோம்…
மாதங்கள் வந்து வந்து போகின்றன…
ஆனால்…நீ…மட்டும்…வருவதேயில்லை….
என்ன செய்வது…?
நீ எங்களை இல்லத்தில் சேர்த்துவிட்டபோது
வந்தாய்…அதன் பிறகு பணம் மட்டுமே வருகிறது…
என்ன காரணமோ நீ எங்களைப்
பார்ப்பதையே தவிர்க்க நினைக்கிறாய்…
உன்னைக் குற்றம் சுமத்த மாட்டேன்…
ஏனெனில்….. நாங்கள் செய்த வினையின்
பலாபலனை இன்று அனுபவிக்கின்றோம்…
என்ன பாவம் செய்தேன் என்றா கேட்கிறாய்…?
ஆம் மகனே! நீ நன்கு படிக்க வேண்டும்
என்பதற்காகப் பார்த்துப் பார்த்து
ஒவ்வொரு பள்ளியின் படிகள் மீதும்
ஏறி இறங்கி உனக்குப் படிப்பதற்கு
இடம் வாங்கி... நீ நன்கு படிக்க வேண்டும்
என்பதற்காக உன்னை விடுதியில் சேர்த்துவிட்டு
விடுதிக்குக் கட்டுவதற்காக
பணத்தைத் தேடிச் சேர்த்து
உனக்கு அனுப்பி வைத்தோம்
உன்னை எப்போதாவது வந்து பார்த்து
உனக்கு வேண்டியதை வாங்கிக் கொடுத்து
உன்னை நன்கு படிக்கச் சொல்லிவிட்டு வருவோம்…
விடுதிக்கும் பள்ளிக்கும் கட்ட வேண்டிய
கட்டணத்தை மட்டும் தவறாமல் கட்டிவிடுவோம்...
நீயும் படித்து ஆளாகி நல்ல வேலையில்
சேர்ந்து மணமுடித்து குழந்தைக்குத்
தந்தையாகவும் ஆகிவிட்டாய்…
நாங்கள் உனக்குச் செய்ததை
கொடுமை என்று நினைத்துவிட்டாய் மகனே…!
ஆம்…! நாங்கள் உன்னை விடுதியில் சேர்த்துப்
படிக்க வைத்ததை நீ எதிர்மறையாக
எடுத்துக் கொண்டுவிட்டாய்….!
நாங்கள் பாசமின்றி நடந்து கொண்டதாக
உன் உள்ளத்தில் பதியமிட்டு விட்டாய்…!
அந்தப் பதியத்தின் விளைவோ என்னவோ
இன்று முதியோர் இல்லத்தில் நாங்கள்…
உன்னை நாங்கள் பார்த்துப் பார்த்து
நல்ல பள்ளியில் சேர்த்ததைப் போன்று
நீயும் பார்த்துப் பார்த்து எங்களை
முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டாய்…
நீ எப்போதாவது வந்து எங்களைப் பார்ப்பாய்
என்ற ஏக்கத்தில் இருந்தோம்…
ஆனால் நீ வராவிட்டாலும்
உன் பணம் இல்லத்திற்கு வந்து சேர்ந்துவிடுகிறது…
அவர்கள் எங்களை நன்கு கவனித்துக் கொள்கிறார்கள்…
நீ உனக்கு நேரம் கிடைத்தால்
எப்போதாவது எங்களை வந்து பார்…
இது வேண்டு கோள் அல்ல…
எங்களின் விருப்பம்…
உன்னைப் பாசம் இல்லாதவன் என்று
பிறர் கூறிவிடக் கூடாது…
அதற்காகவாவது அனைவரையும் போல்
எங்களை இங்கு வந்து பார்த்து விட்டுப் போ…
நாங்கள் அனாதைகள் அல்ல என்று
மற்றவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்…
அந்தக் காரணத்திற்காகவாவது
மாதம் ஒரு முறை வந்து பார்த்துவிட்டுப் போ…
மகனே…!ஒன்றை மட்டும் நீ மறந்து விடாதே…
உனக்கும் ஒரு மகன் இருக்கிறான்…!
- முனைவர் சி.சேதுராமன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.