நதியிலாடும் நிலவு...!
செழுமை விண் இழந்து
வறுமை மண்ஆற்றில் விழுந்ததால்
பட்ட க(சொ)ல் அடியால்
கலங்கிப் போகும்
கண்ணீர் நதியிலாடும் நிலவு...!
உயர்ந்த விண்மலையில்
இருக்கும்போது நிமிர்ந்து பார்த்து
வணங்கிய கண்கள்
தாழ்ந்த மண்ஆற்றில்
இறங்கியதும் கலக்(ங்)கிடச் செய்வதால்
ஆதரவு மழைத்துளி தொட்டாலும்
நொறுங்கிப் போகும்
கண்ணீர் நதியிலாடும் நிலவு...!
வீழ்ந்தவர் எழுவதும்
எழுந்தவர் வீழ்வதும்
வாழ்க்கை சுழற்சியென்றே
உணரா மா(ம)க்கள் துள்ளி
எள்ளி நகையாடுதலால்
தன்னம்பிக்கை மனவொளி குலைந்து
நல்லொழுக்கச் சிதைவுமுகம் காட்டிடலாம்
கண்ணீர் நதியிலாடும் நிலவு...!
மேடும் பள்ளமும்
வாழ்க்கை நீரோட்டத்தின்
சரிபங்கு களமென
முயற்சி தடம் பதித்து
ஒளிர்ந்திடவே
க(சொ)ல் வீச்சை விடுத்து
ஆதரவுமுகம் காட்டினால்
குணக்குளிர்மையுடன் ஒளிரும்
கண்ணீர் நதியிலாடும் நிலவு...!
- நாகினி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.