உயிர்க் கடன்

எந்தக் கடனை எப்படி அடைக்க…
பிறந்தது முதல் ஒவ்வொருவரிடமும்
கடன்பட்டுக் கடன்பட்டு
ஓடிக் கொண்டிருக்கிறது வாழ்க்கை…
ஒவ்வொரு கடனையும் அடைக்க முற்படுகையில்…
புதிய கடன்கள் வந்து ஒட்டிக் கொள்கின்றன…
கடன்களில் தான் எத்தனை எத்தனை
பெற்ற கடன், வளர்த்த கடன்
பிறவிக் கடன், நட்புக்கடன்…
செஞ்சோற்றுக் கடன்…
எனப் பலப்பல இருந்தாலும்
உன்னிடம் பெற்ற கடனை
நான் எதில் சேர்ப்பது…
இதயக் கடன் என்றா…?
இருப்புக் கடன் என்றா…?
நாளையக் கடன் என்றா…?
அல்லது கொடுக்க இயலாக் கடன் என்றா…?
எதுவும் எனக்குப் புரியவில்லை…
அக்கடன் புரிந்தும் இருக்கிறது…
புரியாமலும் இருக்கிறது…
எல்லாக் கடனையும் அடைத்தாலும்
உன்கடன் என் உள்ளத்தை அல்லவா
ஊடுருவி உயிரைத் தொடுகிறது…
இவ்வுயிர்க் கடனை எதைக் கொடுத்து
ஈடுகட்டப் போகிறேன்…
உயிர்க்கடனுக்கு ஈடு ஏதேனும் உண்டா…?
அவ்வுயிர்க்கடன் நாளுக்கு நாள்
அதிகரித்துக் கொண்டே அல்லவா இருக்கிறது…
என் கடன் பணி செய்து கிடப்பதே
என்ற அப்பரைப் போல்…
இந்த உயிர்க்கடனை எப்பணி
கொண்டு நிரப்பப் போகிறேன்…!
வழி தெரியா குழந்தைபோல்…
விழியிரண்டும் அலமர
விழி நீர் பெருகிட…
மறுகிக் கொண்டல்லவா இருக்கின்றேன்…
அரிச்சந்திரன் உண்மையைக் காக்க
உயிர் வாழ்ந்ததைப் போன்று
உயிர்க் கடன் அடைக்கப்
போராடிக் கொண்டே இருக்கிறேன்…
இந்த உயிர்க்கடன்
அடைக்க முடியாதது…
அதிலும் இதயம் பெற்று
இதயம் கொடுக்கும்…
இதயக்கடன் பிறவி தோறும்
தொடர்ந்தே வரும்…
இந்தப் பிறவியில் இறைவன்
இவ்வுயிர்க் கடனை அடைக்க ஏதாகிலும்
வழி தருவானா…?
அல்லது அடுத்த பிறவியில்தான்
இவ்வுயிர்க் கடன் அடைபெறுமா…?
இருப்பினும் இவ்வுயிர்க் கடன்…
உள்ளத்தில் என்றும்
உறவாடிக் கொண்டே இருக்கின்றது…
உலகம் உள்ளளவும் இவ்வுயிர்க் கடன்
உயிரோடு ஒட்டிக் கொண்டே இருக்கும்…
- முனைவர். சி.சேதுராமன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.