நன்னெறிகளை மறக்கலாமோ...?
செல்லமாய் அடித்து
அன்பாய்க் கடிந்து
அக்கறையுடன் பாடம் புகட்டி
மாணவர் கல் உடையாமல்
உயிர் சிற்பம் செதுக்கிய
நல்லாசிரியர்கள்
வழிநடத்திய பூமியிலே
கோபக்கனல் தெறிக்க
ஆத்திரக்கல் எறிந்து
மாணாக்கர் உடல் உறுப்போடு
உயிரையே காவு வாங்கும்
அரக்கரும் ஆசிரியரென
பெயர் தாங்கி உலவுகிறார்
ஆசிரியர் குலப்பெருமைக்கு
காலனாய் முளைக்கின்றார்.
பட்ட வேதனை அடியால்
பிஞ்சில்பழுக்கும் மாணவரோ
கொலை மிரட்டல் விடுகின்றார்
ஆசிரியரைச் சுடுகின்றார்.
வேதனை இது வேதனை
சொல்ல முடியா வேதனை
ஆசிரியர் மாணவர்
நல்லிணக்கம் குறையும் சோதனை
மனிதம் அழிவதான சோதனை
நன்னெறியில் வழிநடத்தி
ஏற்றும் ஏணியே ஆசிரியர்
நலமுடனே உயர்ந்தபின்னே
நன்னெறிகளை மறக்கலாமோ...?
ஏற்றிவிட்ட ஏணியை உதைத்து
இதயத்தைக் கிழிக்கலாமோ...?
இன்றைய மாணக்கராகிய
நாளைய ஆசிரியர்
அடங்காத ஆத்திரத்தீயை
மனதில் வளர்க்கலாமோ...?
- நாகினி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.