வாழ்விளக்கு!

கரு தாங்க நிறை வலி உடலெங்கும் பாய
உடலுள்ளுள்ளே புரியாத உயிரொன்று புரண்டிடவே
ஒவ்வாத குணம் கொண்ட குடலது வயிற்றை குமட்டி வர
வாந்திவாந்தி என்று குடலே வெளிவருமாப் போல்
குணமொன்று தொண்டையிலே தொடர்ந்து வர
கருவென்ற காரணம் கருத்தே புரிந்து கொண்டு
உணவெதுவும் உடலுக்கு உதவாது வெளிவரினும்
உணர்வெல்லாம் கருவிலே பதிந்திருக்க
சிறிதளவு தானேதும் கருவுக்குச் சேர்ந்திடவே
வலியோடுணவு உண்ட மகத்தான மாதாவே! - நான்
உறங்க உன் மடி என்றும் தேவை.
கடினமான கல்போல் கருவொன்று உந்தியிலே உதைத்திருக்க
கட்டிலிலே புரண்டு திரும்பி சரிந்து படுக்கவொண்ணா
நிலையது தோன்றிடினும் வயிறது தடவி,
நிலையது புரிந்து, நீண்ட மூச்சை உள்இழுத்து வெளியிட்டு
நயனமது இறுகமூடி நவரத்தினம் அத்தனையும் ஒன்றாய்க்
கூட்டிய அழகுமகவு காண பொறுத்திருக்கும்
பொறுமையின் பெட்டகமே பேருண்மைப் பாசமே!
என் தலைதடவ உன் கரமென்றும் தேவை.
இருபது எலும்புகள் இணைந்தே உடைவதுபோல்
உடலிலே வலி எடுக்க, மனிதன் தாங்கும் வலி
உலகக் கணக்கு நாற்பத்தைந்தே அலகுகளாயிடினும்
உடல் துடிதுடிக்க ஐம்பத்திரண்டு அலகுகள் பிரசவவலி
அதிசயமாய் தாங்கியே தான் கருவறை தாங்கிய உயிர்
உலகிலே நடமாட உருத்தந்த உன்னத உயிரே!
உயிருள்ளவரை உன் அருகிருக்க அருளொன்று தேவை.
பிரண்டு தவண்டு நடந்து நிமிர்ந்து நலமெல்லாம் நாம்காண
வலியெல்லாம் தான்கண்டு சுகமெல்லாம் எமக்களித்து
பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவையென
பருவங்கள் அத்தனையும் பாடாய்ப்படுத்தி
பருவங்கள் தோறும் பற்பல பிரச்சனைகள் பலவிதமாய்
வகைவகையாய்த் தந்தே பாடாய்ப்படுத்திய எம்மை
ஆதரவாய் அணைத்தெடுத்து ஆறுதலாய் அறிவுரைகள்
ஆற்றியே வழிப்படுத்திய அன்புரிவே!
ஆயுள்வரை உன் அரவணைப்பு எமக்கென்றும் தேவை.
- சந்திரகௌரி சிவபாலன், ஜெர்மனி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.