இனியாவது திருந்துவாயா...?

மிருகமே மிருகத்தை
அடித்துத் தின்றல் இயற்கை நியதி
ஐந்தறிவை ஆறறிவு
உணவுக்காக வெட்டுவதை
பொறுத்திடலாம் இயற்கையென்றே...!
இயற்கை நியதியற்று ஆற்றிடும்
கீழ் செயல் கண்டு
பொறுத்திட இயலாது குமுறும்
ஐந்தறிவு உயிர்மனதைத் தேற்றிடுவீரோ...!
ஆன்மீக நாட்டம் எல்லைமீறி
எம்மை பலியிட்டு விருந்துண்கிறாய்
கடவுளுக்குக் காணிக்கையென...!
மேனியில் பகட்டாய் அணியவும்
பாதுகாப்பாய் போர்த்தவும் உரிக்கிறாய்
எங்கள் உடல் தோலினை...!
அதிர்ஷ்டக் கானல்நீர் தேடி
முறிக்கிறாய்
எங்கள் மான் கொம்பினை
யானை தங்கப்பல் தந்தத்தை
நரிப் பல்லினை...!
இன்னும்... இன்னும்...
பல உயிர்களின் முடியையும்
குறி தாயத்து அணிகலனாக அணியவே...!
தொலைதொடர்பு உறவு கொள்வதற்காய்
கொன்றுவிட்டாய்
எங்கள் குருவியின் மூச்சுக் காற்றை...!
நீ சொகுசாய் வாழ்வதற்கு
வாயில்லா எம்மை அழிப்பதோடு
இயந்திரம் கொண்டு பால் கறத்தல்
சேவல் சண்டையென
வியாபார வித்தைப் பொருளாக்கி
உயிரோடு சாகடித்து
கூடயிருந்தே குழி பறிக்கும்
வித்தை பலகற்ற
குரூரன் எனும் சாதனை சிகரம்
தொடுகிறாயே...!
நாங்களும் மண்ணில் வாழப்பிறந்த
உயிரினமென்பதை இதயத்தில்
பதிக்க மறந்த
பகுத்தறிவு மிருகமே...!
இனியாவது திருந்துவாயா...?
- நாகினி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.