புகை இலை...!
புகை-இலை இலை
பகை இலை
புண்படும் இதழ் இலை
பண்பகம் கெடுதல் இலை
புவிமாசாக்கும் செயல் இலை
பவித்ரமான மனிதம் இழத்தல் இலை
புகைக்கும் மயக்கம் இலை
பகைக்கும் ஈரல் இலையென
புது விழிப்புடன் எழுகவே...
ஈரல் கெடுக்கும் பகைவனாய்
ஈரம் கசியும் இதயம் கெட்டு
ஈவிரக்கமற்ற வன்மச் செயல்
ஈர்ப்புக்குள் நுழைந்து படுபாதக
ஈனனாய் வாழ்ந்திடவோ
ஈன்றெடுத்தாள் அன்னையென
ஈட்டும் நல்லறிவு இதயம் பதித்து
ஈர்க்கும் மாயவலை கிழித்து எழுகவே...
மயக்கும் புகை விடுத்து
மகிழ்வு ஆரோக்கியம் பெற்று
மங்கலமாய் நல்வாழ்வு சீரை தன்னோடு
மற்றவருக்கும் வழிகாட்டி வழங்கும்
மணியான பண்பாளனாகும்
மதி தெளிவுடை மனிதனாய்
மதுமாது புகை போதை மருந்து
மடமை மாயவுலகு நீக்கிய
மறத்தமிழனாய் தடம் பதிக்க எழுகவே...
புகை-இலை இலை
பகை இலை
புண்படும் இதழ் இலை
பண்பகம் கெடுதல் இலை
புவிமாசாக்கும் செயல் இலை
பவித்ரமான மனிதம் இழத்தல் இலை
புகைக்கும் மயக்கம் இலை
பகைக்கும் ஈரல் இலையென
புது விழிப்புடன் எழுகவே...!
- நாகினி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.