சிலைகள் வியக்கும் சிலை!

கோவிலுக்குச் சென்ற
எல்லோரும் கோயில் சிற்பங்களை
ரசித்துக் கொண்டிருந்தார்கள்
அவர்களுக்கு எங்கே தெரியப் போகிறது
சிற்பங்களெல்லாம்
உன்னை ரசித்துகொண்டிருந்தன !
என்பது…
சிற்பங்களுக்கல்லவா சிற்பங்களைப் பற்றித் தெரியும்
பொற்சிலைபோல் நீ
நின்று கொண்டிருக்கும்போது
கற்சிலைகள் உன்னை ரசித்துப் பார்ப்பது
வியப்பல்லவே….!
சிலைகளுக்கு மட்டும்
வாய் இருந்தால் அவையெல்லாம்
உன்னைப் பார்த்துக்
கண்டிப்பாய்ச் சொல்லியிருக்கும்
நீயே எங்களின் உயிர்த் தேவதை என்று…!
இருந்தாலும் அவை எல்லாம்
உன்னை மெளனமாகப் பார்த்து
நீ அழகின் தேவதை என்பதை
ஆமோதிக்கின்றன…
ஆம்…மெளனம் சம்மதத்திற்கு
அறிகுறிதானே…
சிலைக்கும் உனக்கும் ஒரே ஒரு
வேறுபாடுதான்
எதுவென்று தெரியுமா…?
நீ உயிருள்ள அழகுச் சிலை!
பிரம்மனே பிரம்மித்து வடித்த சிலை
சிலைகளோ சிற்பிகள் வடித்த
சிலைகள்… நீ நகரும் அழகுச் சிலை…
பூக்களில் நீ மட்டும்தான்
நகரும் பூ…!
உன் இதழ் விரிக்கும் புன்னகைப் பூவிற்கு
ஈடுகொடுக்க முடியாமல்தான்
என்னவோ மற்றைய பூக்கள் எல்லாம்
பொழுதுக்குள் வாடிப் போய்விடுகின்றன…
ஆம்… நீ சிலைகள் வியக்கும் சிலை…
பூக்கள் பார்த்து பூரிக்கும்
அதிசயப் பூ…!
- முனைவர் சி.சேதுராமன், புதுக்கோட்டை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.