பெண்ணிடம் தோற்ற இயற்கை!

என்னவளே...!
உன் இதழின்
நிறத்தைப் பார்த்துத்
தோல்வியுற்ற பவளம்
தோல்வியால் மனமுடைந்து
தொங்கியதோ உந்தன் காதில்...!
உன் நடை கண்ட
அன்னங்கள்
தம் நடைக்கு நாணி
இவ்வுலகை விட்டே
போய்விட்டன...!
உன் கூந்தல்
நிறங்கண்ட கருமேகக் கூட்டங்கள்
தங்களைப் போன்ற
நிறத்தில் கூந்தல்
இருப்பதைக் கண்ட
ஆனந்தத்தில் மழைக்
கண்ணீர் வடித்தன...!
அன்பே...!
உன் மைவிழியின்
அழகு கண்ட மானோ
நாணமுற்று மருண்டு
உன் மைவிழிப் பார்வைக்குத்
தோற்று கானில்
உறையச் சென்றனவோ...!
என்னிதயமே!
உன் குரல் கேட்ட குயிலும்
உன் குரல்போல்
தன்குரலும் வரவேண்டும்
என்பதற்காகக் குக்கூ என்று
கானில் கூவித் திரிகின்றதோ...!
வானத்தில் நிலவைக் காணாது
விண்மீன்கள் அலைந்தன...!
பாவம் அவற்றிற்குத் தெரியாது...
நிலவரசி நிலவுலகிற்கு
வந்துவிட்டாள் என்று…!
அதனால்தான் என்னவோ
விண்மீன்கள் நிலவாகிய
உன்னைப் பார்க்க
எரிந்து எரிந்து
பூமியில் வந்து விழுகின்றன...!
வானில் உள்ள நிலா
ஏன் தேய்ந்து கொண்டே
இருக்கின்றது தெரியுமா...?
உன் முக நிலவின் ஒளிக்கு
நிலவின் ஒளி
மங்கிய காரணத்தால்தான்
நிலவு தேய்ந்து கொண்டே போகிறது...!
முல்லைப் பூக்கள்
வாடிவிடுகின்றன…
அவை உன் முல்லைப் பூச்
சிரிப்புக்கு ஆற்றமாட்டததால் தான்
வாடி உதிர்கின்றன...!
உன் சங்குக் கழுத்தின்
அழகிற்கு ஈடுகொடுக்க முடியாமல்
சங்குகளெல்லாம்
கடலுள் சென்று வாழ்கின்றன...?
உன் பின்னால்
மீன்கொத்திப் பறவை ஒன்று
பறந்து வந்து கொண்டே இருக்கின்றது...!
ஏன் தெரியுமா...?
உன் முகத்தில்தான் இரு
கெண்டை மீன்கள் இருக்கின்றனவே!
அம்மீன்களைப் பிடித்து உண்பதற்காக
உன்னையே அப்பறவை
வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றது...br>
எல்லாம் எவ்வாறிருந்தாலும்
என்னவளே….!
என்னிதயம் நாளும்
உனைச் சுமக்கும்…!
உன்னழகை என்றும்
சலியாது சுவைத்திருக்கும்...!
-முனைவர் சி.சேதுராமன், புதுக்கோட்டை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.