சோறிடுங்கள் ...!
வேலையின்றி சோம்பி
குந்தித் தின்றால் குன்றும் கரையுமே
உடல் உள்ளிருக்கும் உறுப்பும்
அதனதன் செயல்களை
செவ்வனே செய்திட
காலம் தவறாமல்
ஊட்டுவீர் நல் ஊட்டு...!
புசித்த உணவு செரிக்க
விழுங்கும் மாத்திரைகள்
செரிக்கத் திணறும்
இரட்டைவேலை செரிமானமண்டலம்
சுருக்(ங்)கிடும் ஆயுள்
செயல்பாடு சரியோ தோழரே..!
அளவுமீறி அட்டில்
தட்டில் கொட்டி
போதும் போதுமென
கெஞ்சும் வயிறு குளிர
செரிமானமண்டலத்திற்கு அளவாய்
வேலை தந்து
புசித்து மிஞ்சிய உணவை
வீணே குப்பையில் கொட்டும்
சுயநல ஆரோக்கிய
செயல்பாடும் சரியோ தோழரே..!
உடல் உழைத்தும்
உள்ளுறுப்பு வலுப் பெற
உணவை அரைத்து
உதிரமாய் மாற்ற போதிய
உணவு கிட்டும் வழிகாணாது
உழலும் அபாக்கிய
செரிமானமண்டலம் சீராய்
வேலை செய்யவேனும்
ஏழை வயிற்றுக்கும்
சோறிடுங்கள் கொஞ்சம்..!!
-நாகினி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.