என்னோடு நீவந்து இரு!
உன்னைப் பெற்றே உலகிற்கே நான்கொடுத்தேன்
கண்ணைப் போலுனைக் காத்தேன் – என்னை
கண்கலங்க வைத்தாயே மகனே நான்மகிழ
என்னோடு நீவந்து இரு.
*****
உன்கண்ணீர் நான்துடைத்தேன் என்கண்கள் நீர்வழிய
உன்னுள்ளம் கல்லாகிப் போனதுவோ – என்மகனே
தென்னையும் இளநீர்தரும் நீகண்ணீரைத் தாராமல்
என்னோடு நீவந்து இரு.
*****
அன்பான என்மகனே என்பான என்னை
கண்காணா தில்லத்தில் சேர்த்தாயே – பண்பான
என்னைப் பரிதவிக்க விட்டிடாது என்றும்
என்னோடு நீவந்து இரு.
*****
பெண்டாட்டி பேச்சைக் கேட்கும் பேதையே!
கண்கலங்கா துன்னைப் பார்த்தேனே! – நான்
கண்கலங்கக் காசினியில் விட்டாயே! மனந்திருந்தி
என்னோடு நீவந்து இரு.
*****
நானுனக்குப் பால்பழமும் பார்த்துத் தந்தேன் நீ
தாய்க்குப் பாலெதுவும் தாராதே – நாளும்
கோளும் பாராமல் கேளீரும் ஏசாமல்
என்னோடு நீவந்து இரு.
-முனைவர் சி.சேதுராமன், புதுக்கோட்டை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.