கடிதங்கள்...!

கடிதங்கள் வெறும் கடிதங்கள் அல்ல
அவை பாதுகாக்க வேண்டிய பொக்கிஷங்கள்
ஏனென்றால் அவை எழுத்துக்களாகிய
வைரங்களையும் முத்துக்களையும்
தாங்கி வருவதால்...
கடிதங்களில் உள்ள எழுத்துக்கள்
வெறும் எழுத்துக்கள் அல்ல
அவை நமக்குத் தரும் ஊக்க மருந்துகள்
கடிதத்தில் உள்ள ஒவ்வொரு எழுத்தும்
நம்முள் ஏதோ ஒரு ரசாயன
மாற்றத்தை அல்லவா செய்கின்றன...
கடிதங்கள் கடந்த காலத்தை மட்டுமல்ல
முக்காலத்தையும் நினைவுபடுத்தக் கூடிய
காலப்பெட்டகம்...
கடிதங்களாலேயே இங்கு பல
சாம்ராஜ்யங்கள் உருவாகியிருக்கின்றன…
கடிதங்களே சிலரை சிம்மாசனத்தில்
அமர்த்தி இருக்கின்றன...
கடிதங்கள் சிலரை
சிம்மாசனத்திலிருந்து கீழே
தள்ளியும் இருக்கின்றன...
கடிதங்களே சிலரின் பொய்யான
முகத்திரையைக் கிழித்தெறிந்திருக்கின்றன...
கடிதங்கள் பலரின்
எதிர்கால வாழ்விற்கு
விதையூன்றிருக்கின்றன...
அதனால்தான் கடிதங்கள்
வெறும் காகிதங்கள் அல்ல...
அவை காலத்தின் பொக்கிஷங்கள்...
கடிதங்கள் வரலாற்றை
உருவாக்குபவை... சிலரின்
வரலாற்றிற்கு விதையாக இருப்பவை
நேருவின் கடிதங்கள்
புகழ் பெற்ற வரலாற்றை
பிரியதர்ஷினியின் மனதில்
பதியமிடப் பட்டதால்...
பிற்காலத்தில் புதிய
வரலாறு உருவானது...
காதலி ஜோசப்பைன் கடிதங்களால்
நெப்போலியனின் வெற்றிகள்
வரலாற்றில் பதிவு செய்யப்பட்டன...
ஒரு கட்டத்தில் அவளது கடிதங்கள்
அவனுக்குக் கிடைக்காமல் போனபோது
அவன் வரலாற்றில் பெரும்
சரிவைச் சந்தித்தான்…
வரலாற்றில் சரிந்தும் போனான்...
பிலிப்ஸ் தனது ஆசிரியர்
அரிஸ்டாட்டிலுக்கு எழுதிய கடிதம்
அலெக்ஸாண்டர் என்ற
ஒரு மாவீரனின் வரலாற்றை
உருவாக்குவதற்கு முகவரியானது...
சிலரின் கடிதம் மனதில்
எண்ண மாற்றத்தை ஏற்படுத்தும்...
தவறான எண்ணத்தையும்
துடைத்தெறிந்து விடும்...
மாதவி மடந்தையின் மடல்
மங்காக் கோவலனின் மனதில்
மாற்றத்தைத் தந்ததன்றோ?
சில கடிதங்கள் மாற்றங்களை உண்டாக்கும்
சில ஏமாற்றங்களை உருவாக்கும்...
மாற்றங்களையும் ஏமாற்றங்களையும்
தருவன சில கடிதங்கள்...
பிளேட்டோவின் கடிதங்கள்
அகிலத்தின் அறிவுக் கருவூலம்...
கடிதங்கள் நினைவின் பெட்டகங்கள்
என்றும் அவை மனங்களையும் மனிதர்களையும்
காலங்கள் கடந்தும் நம் அருகில் கொணர்வதால்
கடிதங்கள் காலத்தின் பெட்டகங்கள்...
கடிதத்தைக் கிழித்தெறிதல் கூடாது...
கடிதம் கிழிக்கப்பட்டால்
அங்கு ஒரு இதயம் அல்லவா
தாறுமாறாய்க் கிழித்தெறியப்படுகிறது...
கடிதம் காகிதமல்ல
அது ஒரு மனிதனின் நாடித்துடிப்பு
கடிதம் எழுதியவனின்
எதிர்காலம் அல்லவா அங்கு
பதிவு செய்யப் பட்டிருக்கிறது...
சிலர் கடிதத்தைப்
படித்து விட்டுக் கிழிப்பர்...
ஆனால் சிலரோ
படிக்காமலேயே கிழிப்பர்...
அதில் சிலரோ கிழிக்காமலேயே
அதனைக் குப்பைக் கூடைக்கு
அனுப்பி விடுவர்...
முன்னவர் இதயத்தை நொறுக்குபவர்...
பின்னர் எண்ணங்களை நொறுக்குபவர்...
கடிதத்தைப் படிக்காமல்
குப்பைக் கூடைக்குள்
போடுபவர் அரசியல்வாதி...
சிலர் தங்களுக்கு வரும் கடிதங்களைத்
தாங்கள் மட்டுமே படிப்பர்...
சிலர் தாம் மட்டும் பார்க்காது
எதுவுமே தெரியாததுபோல்
பிறர் படிக்க வேடிக்கை பார்ப்பர்...
கடிதத்தை வாங்கும் சிலர்
கோபம் வந்தால்
அதனைத் தாங்களே கிழித்துவிடுவர்...
இன்னும் சிலரோ
மற்றவர்களை விட்டுக்
கிழித்துவிடுவர்...
எப்படியோ ஒருவரின்
ஆழ் மன எண்ணங்களுக்கும்
அவரது கனவுகளுக்கும்
அங்கு சமாதி கட்டப்படுகின்றன...
கடிதங்கள் படிக்கப்படும் போது
ஒருவரின் மனதும் வாழ்க்கையும்
படிக்கப்படுகிறது...
கடிதங்கள் மனதையும்
வாழ்க்கையையும்
தாங்கிச் செல்லும்
நவீன காலத் தூதுவர்கள்...!
சிலர் கடிதங்கள் எழுதியே
ஆட்சிக் கட்டிலைப் பிடித்தனர்...
கடிதங்கள் அடி மன ஓலங்கள்...
மனதைத் தாங்கி வரும்
இதயங்கள்...!
வானம் கூட
தன்னுடைய மழைக் கையால்
பூமிக் காதலிக்குக்
கடிதம் எழுதுகின்றதே...!
பூமியும் வானத்தைப் பிரதிபலித்து
வானத்திற்குப் பதிலளிக்கின்றது...
கடிதங்கள் எழுதுங்கள்...
கனவுகளையும் இலட்சியங்களையும்
அடைய அவை ஊன்று கோலாக இருக்கும்...
அவை பலரின் வாழ்வில்
மாற்றத்தை ஏற்படுத்தும்...
பலருக்கு வாழ்கையை உருவாக்க
உறுதுணையாக இருக்கும்...
கடிதங்கள் எழுதிக் கலக்கத்தைப் போக்குவோம்...
காலங்கள் நம் மனத்தின் பெட்டகங்களாகும்...!
-முனைவர் சி.சேதுராமன், புதுக்கோட்டை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.