வாழ்க்கை வசப்படும்...!

யாரும் அவரவர் விரும்பும்
வாழ்க்கையை என்றும்
வாழ்வதே இல்லை…
வாழ்க்கையை அவர்களுக்காகவும்
வாழ்வதில்லை...!
யாரையோ யாருக்காகவோ
மற்றவர்களைத் திருப்திப்படுத்துவதற்காகவும்
யாரையோ பழிவாங்குவதற்காகவும்
யாரையோ பழிப்பதற்காகவும்
எப்படியெல்லாமோ வாழ்கிறோம்...!
ஒருநாளாவது நமக்கான வாழ்க்கையை
ஒருநாளின் ஒரு நொடியாவது
ஆத்மார்த்தமாக வாழ்ந்திருக்கிறோமா….?
வெளிநபர்களுக்காக நாம்
ஒவ்வொருவரும் வாழ்கிறோம்…
ஏன்...? எதற்காக...? என்றெல்லாம்
யாருக்கும் தெரியாது...!
ஆனாலும் சில நிர்பந்தங்களுக்காக
நாம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம்…!
நம் உள்ளத்தில் நாம் இருக்கின்றோமா...?
இதுவும் இல்லை...
சில நேரங்களில் உணர்வுகளின்
வயப்பட்டு சிந்திக்காமல்
எடுத்த முடிவுகள்தான்
இதற்குக் காரணமோ...
யாரறிவார்... மனம் என்பது
மர்மக் கோட்டையல்லவா...?
நம்மனதில் நாம் இல்லை…. ஆனால்...
யார் யாரையோ பொதிமாடுபோல்
சுமந்து கொண்டு திரிகிறோம்...
நம் மன விருப்பங்கள்... கனவுகள்...
கற்பனைகள்... ஆசைகள்... பாசங்கள்...
இவை யாவும் நிறைவேறியதா...?
இவற்றை நெஞ்சில் அசைபோட
அசைபோட... கேள்விக் குறியே
இறுதியில் மிஞ்சுகிறது...
இருப்பினும் என்னவோ...
நாம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம்...
வெறுப்பும் இல்லை... விருப்பும் இல்லை...
தாமரை இலைத் தண்ணீர் போன்று...
நாம் நமக்கான வாழ்வை என்று
வாழப் போகிறோம்...?
இதற்கான விடைகள் யாருக்கும் தெரியாது
இதற்கு நம்மிடம் பதில்கள் இல்லை...
இறைவனிடம்தான் இருக்கின்றன...
இறைவன் வகுக்கும் வழியில்
நமக்கான வாழ்க்கையை வாழ்வோம்...
அப்போதுதான் நம் வாழ்க்கை
அர்த்தமுள்ளதாக இருக்கும்...
நமக்கானதை நாமே நிர்ணயிப்போம்...
அப்போதுதான் வாழ்க்கை வசப்படும்...
-முனைவர் சி.சேதுராமன், புதுக்கோட்டை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.