குளம் - வானம் காதல் க(வி)தை!

அமைதியான குளம்
வருவோர் போவோரின் தாகத்தைத்
தீர்த்துக் கொண்டிருந்தது...
அந்தக் குளம் அதில் மகிழ்ச்சியடைந்தது...
பலரின் தாகத்தைத் தீர்க்கும்
பணியைத் தன் கடமையாக நினைத்து
அதனைத் தவறாது செய்து வந்தது...
அதில் தண்ணீர் பருகியவர்கள்
மனிதர்கள் மட்டுமல்ல...
பறவைகள், விலங்குகள், இன்னும்
பற்பல உயிரனங்கள் தங்களின்
தேவையை நிறைவு செய்து கொண்டன...
குளமும் தனது கடமையைத் தவறாது
தலைமேற் கொண்டு செய்தது...
தான் மற்றவர்களுக்கு உதவுகிறோம் என்று
அது கொஞ்சமும் கர்வப்படவில்லை...
மாறாக அக்குளம் மகிழ்ந்தது...
குளத்தில் பறவைகள் மட்டுமல்ல
சிறு சிறு நீர்த்தாவரங்களும்
தாமரையும் கொட்டியும் ஆம்பலும்
செழித்து வளர்ந்தன...
இந்தக் குளத்திற்கு ஓர் ஆசை திடீரென வந்தது...
தனக்கு நீர் வழங்கும் வானத்தை
அது விரும்பத் தொடங்கியது...
அக்குளம் தன் விருப்பத்தை
மனதிற்குள்ளேயே பூட்டி வைத்துக் கொண்டே
இருந்தது...
எப்போதாவது நேரம் வரும் போது
வானத்திடம் சொல்லி விடுவோம் என்று...
வானமும் தனது மழைக்கரங்களால்
குளத்திற்கு நீரைக் கொடுத்துக் கொண்டே இருந்தது...
குளத்தில் தெரிந்த வானத்தைப் பார்த்து
குளம் மனதிற்குள் மகிழ்ச்சியடைந்தது...
ஆகா தான் வானத்தின் மனதிற்குள்
இருக்கிறோம் என்று... ஆனால் தன்
எண்ணத்தை வானத்திடம் சொல்லவில்லை...
வெயில் காலம் வந்தது...
குளம் தனது தண்ணீரை அனுப்பி
வானத்திடம் தனது காதலைத்
தெரிவித்தது... வானமோ...
அத்தண்ணீரை வாங்கிக் கொண்டது...
தண்ணீர் வானத்தினுள் ஐக்கியமானது...
ஆனால் குளத்தின் மனதை அறிந்ததா...?
என்றால் அதற்கு எந்தவிதமான
பதிலும் வானத்திடம் இல்லை...
இருப்பினும் குளம் தனது
எண்ணத்தை மாற்றிக் கொள்ளவில்லை...
முன்னிலும் பன்மடங்கில் வானத்தை
நேசிக்கத் தொடங்கியது…
மீண்டும் மீண்டும் தனது தண்ணீரையெல்லாம்
தன் காதலைச் சொல்லும் வண்ணம்
வானத்திடம் தூது விட்டது...
முன்பு போலவே குளமும் அத்தண்ணீரை எல்லாம்
தன்னுள் ஐக்கியப் படுத்தியதே தவிர
எந்தவிதமான பதிலையும் தரவில்லை...
இருப்பினும் குளத்தினுள் தான்தான்
தெரிகிறோமே குளம் இதனைப் புரிந்து
கொள்ளும் என்று வானம் நினைத்ததோ
என்னவோ? வானம் எதுவும் கூறவில்லை...
குளம் வானத்தை விரும்புவதை நிறுத்தவில்லை...
குளம் தன்னிடம் உள்ள தண்ணீர் முழுமையும்
சூரியக் கைகளால் அள்ளி அள்ளி
வானத்திடம் தூதுவிட்டது...
முடிவில் குளம் தன்னை இழந்தது...
வானம் அதில் தெரியவில்லை...
குளத்தைப் பயன்படுத்திய பறவைகள், விலங்குகள்,
மனிதர்கள் யாரும் அதனைத் தேடி
வரவில்லை... கொட்டியும் ஆம்பலும்
தாமரையும் குளத்தின் துயரத்தை எண்ணி அதனுடனேயே
தங்கி இருந்து துன்பத்தைப் பகிர்ந்து கொண்டனர்...
வறண்ட நிலையிலும் அந்தக் குளம்
வானத்தை விரும்புவதை மட்டும்
விட்டுவிடவில்லை...
என்றாவது ஒருநாள் வானம் நம்மைத்
தேடி வந்தடையும் என்ற நம்பிக்கையுடன்
காத்திருந்தது... நாட்கள் கடந்தன...
ஆனால் மழைக்கைகளை நீட்டி
வானம் குளத்தை வாரியணைக்க மட்டும்
பூமியை நோக்கி வரவேயில்லை...
குளம் தனக்குத் தானே பேச ஆரம்பித்தது...
வானமே உன்னையே நான் நினைத்துப்
பிரதிபலித்தேன்... ஏனோ நீ என் காதலை ஏற்று
என்னைப் பிரதிபலிக்கவில்லை? என்று
கேட்டுக் கொண்டே இருந்தது...
ஆனாலும் வானம் வாய்திறந்து பதிலைப் பகரவில்லை...
குளம் முடிவு செய்தது... வானமாவது மகிழ்ச்சியுடனிருக்கட்டும்...
நாம் நமக்குள்ள துயரத்தை ஆற்றிக் கொள்வோம்...
என்று தனக்குள்ளேயே தனது காதலைக்
கொன்று புதைத்துக் கொண்டது...
இதைப் புரிந்து கொள்ளாத வானம்...
குளத்தின் மீது கோபம் கொண்டது...
குளம் தன்னை ஏமாற்றி விட்டதே...
தன்னைப் பிரதிபலிக்கவில்லையே...
தன்மீது காதல் வயப்பட்டதெல்லாம்
பொய்யோ...? பழங்கதையோ...?
ஒவ்வொரு நாளும் என்னைப்
பிரதிபலித்துத் தன் அலைக் கரங்களால்
ஆரத் தழுவியதே இந்தக் குளம்...
இதுவா இப்போது மனம் மாறிவிட்டது…
எப்படி இதற்கு இப்படியொரு கீழான எண்ணம்...
இப்படியும் ஒருவர் உலகில் இருப்பாரா...?
என்றெல்லாம் வானத்தின் மனதில்
எண்ணங்கள் மின்னல்களாக ஓடி ஓடி மறைந்தன...
வானம் ஒன்றை மட்டும் மறந்து போனது...
குளம் வறுமையடைந்து விட்டது என்பதை மட்டும்...
தவளைகள் வானத்தைப் பார்த்து
குளத்தைப் பற்றிப் புகார்களைக் கத்திக் கத்திக்
கூறியது... குளத்தில் நீர் இருக்கிறது
நீரையெல்லாம் குளம் மறைத்து வைத்துவிட்டு
உன்னைக் குளம் ஏமாற்றிவிட்டது...
குளம் உன்னைக் காதலித்தது பொய்...
குளம் உன்னை ஏமாற்றி விட்டது...
என்ற பொய்யைத் திரும்பத்திரும்ப
தவளைகள் ஒன்றாக இரைந்து இரைந்து
பெருத்த சத்தத்துடன் வானத்தின் காதில்
விழும் வண்ணம் கூறியது...
தவளைகளின் சத்தம் நித்தமும்
வானத்தின் செவிகளில் விழுந்ததால்
வானம் குளத்தின் நிலைமை அறியாது
குளத்தின் மீது கோபமுற்றது...
உண்மை அங்கு ஊனமானது...
யாரோ சொன்னதைக் கேட்டு
தன் எண்ணத்தை உடனே வானம் மாற்றிக் கொண்டது...
குளத்தின் மீது வானத்திற்குக் கடுங்கோபம்
குளமே குளமே என்னையா ஏமாற்றினாய்...
நீரை ஒழித்து என் காதலையும் ஒழித்து விட்டாயே...!
உன்னை நான் பழிவாங்குவேன் என்று கூறி
சடசடவென்று பட்டென்று முடிவை
மாற்றி எடுத்தது... குளத்திடம் தனது
முடிவைக் கூறவுமில்லை... குளத்தின் மனதை அறியவுமில்லை...
உணர்ச்சி வேகத்தில் எடுத்த முடிவு...
உள்ளத்தில் குளத்தைப் பழிவாங்கும் உணர்ச்சி
குளத்தின் உள்ளத்தை உடைத்துவிடுவேன்...
உள்ளத்தில் ஆயிரம் பலிவாங்கும் உணர்ச்சி...
குளத்தை இனிமேல் நான் திரும்பிப் பாரேன்...
என்று கடலை நோக்கி வானம் பயணப்பட்டது...
கடலுடன் வானம் கலந்தது நன்கு...
இருந்தும் வானத்தின் வன்மம்...
போகவுமில்லை...மனதை விட்டு அகலவுமில்லை...
குளத்தை பார்த்துப் பழிவாங்க வேண்டும்
என் உள்ளத்தை உடைத்த
குளத்தின் உள்ளத்தைச் சுக்குநூறாக
உடைத்தல் வேண்டும்...
எண்ணத்தில் கருத்துக்கள் அலைமோத அலைமோத
வானத்தின் முகமும்
ஒருநாள் கருத்தது...
தன் கோபத்தீயை மின்னலாய்க் கக்கியது...
குளத்தின் கரையை உடைப்பேன் என்று
தன் மழைக்கரங்களால் குளத்தின்
குரல்வளையைப் பிடித்தது...
குளமோ கத்தவுமில்லை... வானத்திடமிருந்து
தப்ப முயலவுமில்லை...
தான் விரும்பியதே தன்னையழிக்க
முயலும்போது இராமனின் கோதண்டம்
பட்ட தவளையாய் அமைதி காத்தது...
குளத்தின் அமைதி வானத்தைச் சீண்டியது...
குரல் வளையை மழைக்கையால்
மேலும் மேலும் அழுத்திப் பிடித்தது...
அப்போதும் குளம் அமைதி காத்தது...
மழையின் பிடி வலுக்க வலுக்க
மெல்ல மெல்லக் குளம் தன்னுருப் பெற்றது...
அப்போதும் குளம் வானத்தைப் பார்த்துப் பிரதிபலித்தது...
மழை கை விட்டு வானம் குளத்தைப் பார்த்தது
பார்த்த வானம் அதிர்ந்து போனது...
அடடா அடடா... இப்போதும் குளம்
நம்மைக் காட்டுகின்றதே...
உள்ளத்தில் இருக்கும் உண்மையை
மறந்து மாற்றார் உரைத்த
பொய்யுரை பற்றி உண்மைக் காதலைத் துறந்து விட்டோமே...
என்று நைந்து நைந்து குமுறி அழுதது...
நிறைந்த குளத்தில் கண்ணீர் முத்துக்கள்...
குளம் தன் அலைக்கை நீட்டி
வானத்தின் கண்ணீர் துடைத்தது...
உண்மையை உணர்ந்த வானம் நிர்மலமானது...
குளத்திடம் வானம் வருந்திக் கூறியது...
குளமே குளமே... என்னை நீயும் மன்னித்துவிடுவாய்...
உன் மனத்தின் நிலைமை அறியா
அறிவிலியானேன்... ஐயப்பட்டு அன்பைத் துறந்தேன்...
அழியாக் காதலை அழிந்ததென்று எண்ணினேன்...
இமயமாய் நீயும் உயர்ந்தே விட்டாய்...
இளைத்த உள்ளத்துடன் நானுமிருந்தேன்...
உன்னில் என்னைப் பார்த்தபோதுதான்
உண்மை நிலையை நானும் உணர்ந்தேன்...
மடமைமிக்கோர் மடத்தனத்தாலே...
மாண்புறு உளத்தினை யான் முறித்தேனே...
எந்தன் மடமையை என்னென்று உரைப்பது...
எந்தன் மடமையை எண்ணி நான் வெட்கினேன்...
உன்னையும் என்னையும் ஒட்டாமல்
செய்தவர் ஒன்றுமிலாது மண்ணில் மாய்வர்...
மாயத்தால் நானும் என் காயத்தை இழந்தேன்...
காயத்துக்குள்ளே என்னை வைத்து நீ
இன்றும் என்றும் நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய்...
உன்னை நானே தவறாய்க் கணித்தேன்...
எந்தன் உள்ளம் காயம்பட்டது...
இந்தக் காயம் என்றும் இருக்கும்...
ஆறா வடுவாய் ஆகிவிட்டது...
அன்பே அன்பே இது அடுக்காது...
உன்னை நானும் மறக்கவுமில்லை...
என்றும் மறந்தும் நானிருக்கவில்லை…
தவறாய்க் கிடைத்த தகவலைக் கேட்டு
ஐயகோ எந்தன் உள்ளம் தடுமாறிவிட்டதே...
குளமே குளமே மன்னித்துவிடுவாய்...
குறுகிய எண்ணத்தை நானும் விடுத்தேன்...
இருவர் மீதும் தவறேதுமில்லை...
காலச்சூழல் நம்மைப் பிரித்தது...
காலனாய்ச் சிலர் ஈடுபட்டதனால்...
கனிவான உள்ளம் காயம் பட்டது...
இருவர் உள்ளமும் ஒன்றுடன் ஒன்று
இன்னும் நன்கு ஒட்டிக் கொண்டிருப்பதால்
இனிமேல் நாமும் கலங்குதல் வேண்டாம்...
இனியொரு காலம் நமக்கென்று வரும்...
அந்தக் காலம் வசந்த காலம்...
காலம் வரும்வரை காத்துக் கொண்டிருப்போம்...
அதுவரை நமது கடமையை முடிப்போம்...
ஆண்டவன் கட்டளை அதனை ஏற்போம்...
அடுத்த பிறவியில் நாமும் இணைவோம்...
அதுவே நம் உள்ளத்தில் உள்ளது
என்று வானம் கூற குளமும்
அலைக் கைகளைக் கொட்டி ஆர்ப்பரித்தது...
ஆஹா... ஆஹா... அருமை... அருமை...
இப்போதாவது எனதன்பை உணர்ந்தீர்...
இனிவருங்காலம் வசந்த காலம்...
அதுவரை நாமும் பொருத்தே இருப்போம்...
காலம் மாறும் கவலைகள் மாறும்...
கட்டிய தளைகள் அறுந்தே போகும்...
இப்போதாவது என் உளம் அறீந்தீரே...
அதுவே நன்று அதுவே நன்று...
என்று கூறி குளம் குதூகலித்தது...
அன்றிலிருந்து குளமும் வானமும்...
அடுத்த கட்ட வாழ்க்கையைத் தொடங்கின...
அனைவரும் அதனைப் பார்த்து மகிழ்ந்தனர்...
அழிவைத் தேடிய அனைவரும் ஒடுங்கினர்...
குளமும் வானமும் கடமையைச் செய்யவே...
குவலயத்தோர் அனைவரும் பயனடைந்தனர்...
உண்மை அன்பு அழிவதுமில்லை...
உறவை என்றும் துறப்பதுமில்லை...
கள்ளம் கபடு அதிலிருக்காது...
பழிவாங்கும் எண்ணமும் பக்கம் வராது...
எண்ணங்கள் என்றும் பட்டுப்போகாது...
எண்ணங்கள் ஆங்கே தூய்மையானதாம்...
எழிலார் வாழ்க்கை மலரும் ஆங்கே...
துரோகிகள் என்றும் துடுக்கென அழிவர்...
தூய உள்ளங்கள் ஒளியினைப் பாய்ச்சும்
அந்த ஒளியினில் உலகம் துலங்கிடும்...
அதனை அனைவரும் வியந்தே பார்ப்பர்...
வஞ்சமும் நஞ்சும் அதிலிருக்காது...
ஒருவர் வளமையில் ஒருவர் மகிழ்வர்...
அடுத்த பிறவியில் அவ்வுள்ளங்கள் சேரும்
ஆண்டவன் அவற்றை இணைத்தே வைப்பார்...
இறைவன் வகுத்த விதியென நினைத்து
குளமும் வானமும் இறைவனை வணங்கின...
இறைவன் மகிழ்ந்து கடைக்கண் பார்த்தான்...
அந்தப் பார்வையில் அன்பு தெரிந்தது...
உங்கள் அன்பே உங்களைச் சேர்க்கும்...
உள்ளத்தில் அச்சத்தை அறவே ஒழிப்பீர்...
தூய அன்பின் வடிவம் நானே...
தூயோரே இதனை உணர்வீர்...
துன்பங் களைந்து இன்பம் அடைவீர்...
இகமும் அகமும் உங்க வசமே...
என்பதை உணர்ந்து இன்பமாய் வாழ்வீர்...
எல்லையில்லா வளர்ச்சி காண்பீர்...
அதிலே என்றும் மகிழ்ந்தே இருப்பீர்...
அகிலம் போற்ற என்றும் வாழ்வீர்...!
அடுத்த பிறவியில் உறுதுணை நானே...!
உங்களின் உளங்களை நானே இணைப்பேன்...
கவலை ஒழித்து கண்ணீர் ஒழித்து
கடமையை நன்றே இன்றே செய்க...
ஒருவருக்குள் ஒருவர் நீங்கள் இருந்தும்
உணரா உளத்துடன் நடந்து கொண்டீர்கள்...
பிறரின் கருத்தை பேதைமையுடனே
பிறழ உணர்ந்து பிரிந்துவிட்டீர்கள்...
இனியும் அதனை நினைத்து நீங்கள்
விசனப்படாதீர் விரக்திப்படாதீர்...!
நல்ல பண்பும் நல்ல எண்ணமும்
உங்களை என்றும் ஒன்றாய்ச் சேர்க்கும்
என்றே கூறி இறைவன் வாழ்த்தினான்...
வாழ்த்தைக் கேட்ட வானமும் குளமும்
ஒன்றில் ஒன்றைப் பிரதிபலித்து
ஒன்றில் ஒன்றைப் பார்த்து நன்கு
இன்பமாய்க் காலத்தை இனிதாய்க் கழித்தன...
அடுத்த பிறவியில் இவ்விதயங்கள் இணையும்
அந்த நாளுமே பொன்னாளாமே...!
இறைவன் உரைத்தது உண்மையில் நடக்கும்
இன்பம் அன்று இனிதாய் மலரும்...!
-முனைவர் சி.சேதுராமன், புதுக்கோட்டை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.