வாழ்த்துமழை தூவ...!
அசையும் சூல் கொண்டலைத்
துணைக்கழைத்தேன்
குழந்தைகள் தினத்திற்கான
வாழ்த்து மழைத் தூவலாம்
வா என்று...
ஓ..! வாழ்த்தலாமே!! என
ஆவலோடு வந்தென்
முகம் பார்த்து
யாரை முதலில் வாழ்த்தலாமென
பட் டு பட்டென
புட்டு புட்டு வை(தை)த்தது மேகம்...
பள்ளியின் வாசலில்
கல் உடைக்கும் சிறுவன்
குழந்தைகள் தின நாளிலும்
விடுமுறை இன்றி
தீப்பெட்டி ஒட்டும் குருத்து
குழந்தைகள் தினத்துக்கான
தலைவர்களின் வாழ்த்தமைந்த
தினத்தாளுடன்
பேப்பர் போடும் சிறுவன்...
பெற்றோர் முகம் காணாது
காப்பகத்தில் மலரும்
மொட்டுகள் ...
பெற்றோர் இருந்தும்
அவசர உலகில்
பணம் தேடும் இயந்திரமனதால்
சில மணித்துளிகள்
பெற்றோர் முகம் காணும்
பிஞ்சுகள்...
கூடி விளையாடும்
பக்குவம் இழந்து
இயந்திரங்களுடன் விளையாடி
இயந்திரமாகும் இளந்தளிர்கள்...
ஏக்கம் சிரம் தாங்கி
எழுந்து நிற்க இரந்து
ஏந்தும் கைகளுக்கு
எசப்பாட்டாகும்
ஏழ்மை மலர்களெனும்
மழலை செல்வங்களில்...
யார்பக்கம் முதலில்
குழந்தைகள் தின
வாழ்த்துமழை தூவலாமென
யோசனை கேட்ட மேகத்திற்கு
பதிலுரைக்கத் தடுமாறிய
அவலநிலை கண்ணுற்ற மேகத்தின்
கருவிழியில் பொழிந்தது நீர்...!!
- நாகினி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.