குழந்தைகள் தினம்...!
குப்பைத் தொட்டியில்
வீசி எறியப்படும்
குப்பைக் குழந்தைக்கும்
குழந்தைகள் தினமாம் குழந்தைகள் தினம்...
கள்ளிப்பால் கொடுத்து
சிசு வதைக்கு ஆளாகும்
பெண் குழந்தைக்கும்
குழந்தைகள் தினமாம் குழந்தைகள் தினம்...
ஆண் பெண் இணைவில்
பெற்றோர் இல்லாது
பிறந்த
அனாதைப் பிள்ளைக்கும்
குழந்தைகள் தினமாம் குழந்தைகள் தினம்...
பிஞ்சிலே பழுக்க
நெஞ்சிலே குடும்பபார நஞ்சுண்ட
தொழிலாளராய்
உருகும் குழந்தைக்கும்
குழந்தைகள் தினமாம் குழந்தைகள் தினம்...
பெற்றோர் கண்காணிப்பில்
ஆடி ஓடி
கூடி விளையாடும்
மனப்போக்கு தேய்ந்து
கணினியே கதியென
இயந்திரமாகும் பிஞ்சுக்கும்
குழந்தைகள் தினமாம் குழந்தைகள் தினம்...
பெண்சிசுகொலை
குப்பைத்தொட்டியில் மழலை
தொட்டில் திட்டம்=அனாதை
குழந்தைத் தொழிலாளர்
இயந்திர மன மழலையென
குழந்தைகளின்
மகத்துவ மலர்ச்சிக்குத்
தடை தராமல் ஊக்கப்படுத்திப்
போற்றிக் கொண்டாடுதலே
குழந்தைகள் தினமாம் குழந்தைகள் தினம்...
ஒழுக்கம் கற்பு உயிரென கூவும்
உயர்பண்பாடு கடல்
பார் ரத(பாரத) திருநாட்டில்
கோலாகலமாய் குழந்தைகள் தினக்
கொண்டாட்டமாம் கொண்டாட்டம்...!!
- நாகினி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.