வாழ்வின் பொன்னாள்!

குடைகள் போல் நிழல்
பரிமாறிக் கொண்டிருந்த
பெரு மரங்களையெல்லாம்
தங்க நாற்கரத்திற்காக
தவிடுபொடி ஆக்கிவிட்டோம்...
நன்றாக இருந்த
நமக்கு நன்மை செய்த
மரங்களை எல்லாம்
பிடுங்கி யெறிந்து பெருமையடித்துக் கொண்டோம்...
மரங்களைப் பிடுங்கியதில்
இடங்கள் தங்களின்
இயல்பான முகத்தை
இழந்தன…. இனிதாய்ப் பறந்த பறவைகளையும்
கண்ணுக்கு அழகாய் அமைந்த
பசுமைகளையும் மண்ணைவிட்டு
நாம் விரட்டி அடித்துவிட்டோம்...
மலைகளில் நீள அகலங்களை
அளவு நாடாக்களில் அளந்து
மகிழ்வாய் வாழ்ந்த நம்
தொன்மக் குடிகளின் மீது
அம்புக் குறிகளிட்டும்
அவர்களை அடித்து விரட்டியும்
அப்பாவியாய் இருந்த அந்த மக்களை
அப்புறப்படுத்தி தேயிலை காபி பயிரிட்டோம்...
கோடை வாசஸ்தலங்களை உருவாக்கி
மலையை நாமும் பாலையாக்கினோம்...
நம்மவர்கள் பைகள் மட்டும் நிரம்பின...
தொல் குடிமக்களின் கண்கள் குளமாயின...
வாழ வகையின்றி... மண்ணைவிட்டுப்
பிரிந்த மக்கள்... மாசடைந்த நகர்களிலே
மாட்டைவிடக் கேவலமாய்...
சொந்த நாட்டில் அகதி போல்
சொல்லொணாத் துயரடைந்தார்...
பச்சை வயல்களில்
கட்டிடங்களை விளைவித்துக்கொள்ள
குளிர்சாதன அறைகளில்...
தலைவர்களிடையே
கையொப்பங்கள் பரிமாறியாயிற்று...
பூர்வீகத்தைத் தொலைத்த
மண்ணின் மைந்தர்களை
உளைச்சல் மிகுந்த உள்ளத்தோடு
நகர்ப்புறங்களில்
அகதிகளாக்கியாயிற்று...
மரங்களை இழந்த பறவைகளும்
தங்களது மொழியினை மறந்தபடி
பறந்து கொண்டிருக்கின்றன...
கடும் வெயிலிலும்...
மழையிலும்... குளிரிலும்...
அவை இருக்கவும் ஒதுங்கவும்
ஒன்றுமில்லை... செல்போன் டவர்களால்
அவற்றின் இன அழிவையும்
என்றோ நாம் தொடங்கியாயிற்று...
பறவை இனங்களில் மீதிப் பாதியும்
பாரில் அழிந்தே பரிதவித்தன...
மிச்சம் இருப்பவையும்...
மவுனத்தைச் சுமந்தபடி...
அழிவின் விளிம்பில்...
நாம் மட்டும் சாதனை என்ற பெயரில்
சாத்தான்களாய் உலாவுகிறோம்...?
இரசாயனக் கழிவுகளால்
குளமும் ஆறும் நஞ்சாகி
மண்ணும் மலடாக
மனம் மயங்கித் திரிகின்றோம்...
பணவெறி கொண்டு
மண்ணைக் கொன்றுவிட்டு
மண்ணுக்கே இரையானோம்...
இனியாவது விழித்துக் கொண்டு
பூமித் தாயைப் பாதுகாப்போம்...
அன்றே நம்மை உயிர்கள் வாழ்த்தும்...!
அதுவே வாழ்வின் பொன்னாளாகும்...!
- முனைவர் சி.சேதுராமன், புதுக்கோட்டை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.