சுனாமி...! நினைவாஞ்சலி...!!
இயற்கையை அன்னையென
போற்றி வணங்குகிறோமே
அன்னை தம் பிள்ளைகளை
உண்டு செரிக்க நினைப்பதுண்டோ...?
கரை தாண்டாத ஆழி அன்னை
தடம் மாறி ஒரு கணத்து
அகோரப் பசிக்கு கரை தொட்டெழும்பி
உயிர் உடமைகளைக் குடித்து பசியாறுவதேனோ...?
கணப் பொழுதில் கடலன்னை
கரை கடந்து காவு கொள்ளும்
கடல்கோள் வரலாற்றுப் பதிவெனும்
கருணையற்ற நிலை தொடர்வதேனோ...?
கடவுள் இல்லை யெனும்
மனிதர் கூற்றை மெய்யாக்கவோ
அன்றி
கண் அசைவில்
கண நேரத்தில் மாறும் உலகென
தன் இருப்பை நிலைநிறுத்தவோ
இறைவன் ஏவுகிறான் இயற்கைப் பசிச்சதியை...!
புரியாத புதிர் புரியாத புதிர்
விடை மலராத தளிர் விடை மலராத தளிர்
இயற்கை கோரத்தாண்டவ நாட்டியக் கதிர்
இயற்கை கோரத்தாண்டவ நாட்டியக் கதிர்...!!
- நாகினி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.