புத்தாண்டில் புன்னகை நிலைக்கட்டும்...!
கண்ணீருக்கும் சிரிப்புக்குமிடையே
காலண்டர் தாள்கள்
கிழிக்கப்படுகின்றன...
வெங்காயம் உரித்தலாய்
வெற்றிடம் நோக்கிய
வேறு வேறு பயணங்கள்...
பருவகாலப் பண்டமாற்று-
இளமையை வாங்கிக் கொண்டு
முதுமையைத் தந்து செல்கிறது
காலம்...
நிரந்தரமானவன் என்ற
நினைப்புத்தான்
நிரந்தரமாகிவிட்டது
மனித வாழ்வில்...
கண்டு கேட்டு
திருந்தாதபோது,
கையில் பிடித்து
கையைக் கடித்து
கற்றுக்கொடுக்கிறது
காலம்...
நாளை நல்லதே நடக்கும் -
நம்பிக்கை நோக்கி
நகர்கிறது காலம்...
போகட்டும் கடந்த ஆண்டு-
புதிதாய்ப் பிறக்கும் ஆண்டையும்
புன்னகையோடு வரவேற்போம்...!
புத்தாண்டில்
புன்னகை நிலைக்கட்டும்...!
- செண்பக ஜெகதீசன்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.