தை மலர்கிறது...!
கூத்துக்காரர்களென
அரிதாரம் பூசிக் கொண்டுவிட்டன
குக்கிராமத்து வீடுகள்...
நவநாகரீக யுவதிகளின்
நகப்பூச்சுகளைப்போல
கொம்புகளுக்கு வர்ணம் பூசி
கொல்லையில் இளைப்பாறுகின்றன
உழவுமாடுகள்...
ஏறுதழுவுதலுக்கு
நாழியாகிவிட்டதென
இருப்பு கொள்ளாமல்
தலைவாசலில் சீறிப்பாய்கின்றன
இளவட்டக் காளைகள்...
அடிக்கரும்புகளைக் கடைவாயில்
கடித்தபடி தெருவில்
ஆனந்தக் கூத்தாடுகிறார்கள்
அறியாப்பிள்ளைகள்...
பனியில் நீராடி
பானையில் பச்சரியிட்டு
பாலெனப் பொங்கும் சமயம்
செங்கதிரைக் கைதொழுது
குலவையிடக் காத்திருக்கிறார்கள்
குலமாதர்கள்...
படியளந்த நிலம்நோக்கி
விடியலில் விந்திவிந்தி
நடையளக்கிறான்
விவசாயி...
தாய் நிலந்தன்னில்
தனயனவன் வணங்கி எழ
வரப்போகிற தென்னையில்
கரிச்சான்கள் வாய்பிளந்து
ஆர்ப்பரிக்க
குறிஞ்சியென மலர்கிறது
குதூகலமான தை...!
- ஸ்ரீதர் பாரதி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.