தை மகள் வந்தாள்!
தை மகள் வந்தாள்
தையல் ஏறுடன் மணமேடை ஏற
தைரியம் ஊட்டும் திங்களாக
தை மகள் வந்தாள்...
மங்கல நிகழ்வுக்குப் பீடையெனும்
மார்கழி குளிர் தரைபிளக்க
மங்கல தீபமேந்தி எழும்
மாசற்ற மாதமாக நலம்தர
தை மகள் வந்தாள்...
பஞ்சமில்லாத அன்னக்கொடி பறக்க
வஞ்சமில்லாது உழைத்தும் தன்னகத்தில்
பட்டினித் துயருறும் வறிய உழவரும்
வசந்த கதிரை வணங்கிடவே
தை மகள் வந்தாள்...
இனிமை வரவுகள் ஒலிக்க
நலிந்த மனதிற்கு வலுவாகி
இன்னல் நீங்க வழி பிறக்கும்
நம்பிக்கை ஊக்கியாக மலர்ந்து
தை மகள் வந்தாள்...
பொங்கட்டும் இனிமை
தங்கட்டும் மகிழ்வெங்கும்
நிறையட்டும் மனதில் ஒற்றுமை
கறையட்டும் வேற்றுமை தை தையென
தை மகள் வந்தாள்...!
- நாகினி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.