அம்மாவுக்கு ஈடாகுமா...?

கண்மூடித்தனமாகப் பாசம் வைத்து
கண்ணுக்குள் பொத்தி பொத்தி வைத்து
கலங்காமல் காலமெல்லாம் சிரித்திருக்க
கண்மணியென வளர்த்தாயே அம்மா...
அன்புப் பாலூட்டி
அகரம் கற்பித்த முதல் ஆசானாகி
அக ஒழுக்கம் சிறப்புற
அல்லும் பகலும் காவலானாயே அம்மா...
கை பிடித்து நடை பழக்கி
கைகள் மட்டுமின்றி தன்னம்பிக்'கை'
கைங்கர்யம் ஒன்றே வழிநடத்துமென மனக்
கைகளுக்கு வலு தந்தாயே அம்மா...
வெறுமை நீக்கும் தோழியாக
வெற்றி அனுபவம் கதைகள் பேசி
வெள்ளை உள்ளத்துடன் வீரப்பாலும் ஊட்டி
வெளிச்சப் பாதை காட்டினாயே அம்மா...
கட்டுமீறி பிழைகள்தான் செய்தாலும்
கண்டிப்பு அக்கறை பரிவுடன் கலங்கும்
கண்ணீர் அருவியில் பாவியெனை
கருணையோடு மன்னிப்பாயே அம்மா...
ஆதாரமாக தாங்குவேன் நாளையென்று
ஆகாயத்தில் கோட்டை கட்டாத அக்கறையுடன்
ஆதரித்து அரவணைத்த அன்னைதந்தையை
ஆசைசிறகு முளைத்ததும் உதறிடுவேனோ அம்மா...
மயக்கும் காதல் வலையில்
மனம் பறிகொடுத்த மானாய்
மறைத்த காதலுடன் வீட்டைவிட்டு
மறைந்து ஓடியபோதும் அம்மா...
ஓடுகாலிய பெத்தவன்னு ஊரெல்லாம்
ஓங்கி குரலெழுப்பி வசைபாடும்
ஓலம் மனதைச் சுட்டபோதும் மனமுருக
ஓதி என்நலம் வேண்டுவாயே அம்மா...
பெரியவர்களை மதிக்காம
பெத்தவங்க மனசு நொந்து வாட
பெயரைக் கெடுத்து வீட்டைவிட்டோட
பெய்த காதல்மழை புயலாகிடுமே அம்மா...
தலை மூழ்கும் அபாயம்
தங்கத்திற்கு வந்ததென்று தவிப்புடனே
தலைமோதி விழாதபடி ஒழுக்கமுடன் நடந்து
தரணியில் உனைத் தாங்கிப் பிடித்திடுவேன் அம்மா...
உலகெலாம் பரிசாக கிடைத்தாலும்
உனதன்புக்கு ஈடாகாதெனும்
உண்மை உணர்த்தும் பிறவிதோறும்
உன் மடியில் பிறக்கவேண்டும் அம்மா...!
- நாகினி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.