மாய உருவம்
எனது தனிமையின்போது
என் சன்னலைப் பிடித்திருக்கின்றன
உனது கைகள்.
கதவிடுக்கில் நுழைய முயன்று
தடுமாறி சிக்கிக் கொள்கிறாய்.
உன் மூச்சுக்காற்று தூதுவரும் எனது அறையில்
உனது மாய உருவம் பின்வந்து
கழுத்தைக் கட்டிக் கொள்கிறது.
உன் குரல் வந்து
முகம் காணாது மறையும்
எனது அறையில்
உலகெங்கும் நிரம்பிய உன் உருவம்
என் கையில் எட்டாமலே போகுமோ?
அண்ட சராசரம் பொங்கி வெடிக்கிறது
மாமாங்க மலைகள்
கரைந்து பொடிகிறது.
கரைந்த காகம் நம் காதலென எழும்புகிறது.
வாகையில் நெற்றுகள்
மௌனமாகின்றன.
ஆடுகளின் மணியோசை அசைந்தசைந்து
அழுகின்றது.
செழித்த புளியம்பழங்கள்
கொட்டைச்சரம் வெளித்தெரிய
சாலையில் நசுங்கிக் கிடக்கிறது
என் சன்னல் கம்பிகளில்
உனது கைகள் படர்கின்றன.
உன் மாய உருவம் தூரப்பருந்தெனப்
பறந்து கரைகிறது.
நொறுங்கி விழும் கட்டிடத்தில்
சிக்கிய குழந்தையென
உன் நினைவில் நான்.
- கலை இலக்கியா.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.