கண்டால் சொல்லு...!

தேமொழியாள் இதயத்தில் எப்போதும் இருப்பதைத்தான்
தீப்போன்று பரவிவரும் சூரியனே நீ கண்டாயோ?
காதோரம் கிசுகிசுக்கும் காற்றேநீ கண்டாயோ?
ஆற்றோரம் அசைந்திருக்கும் அறுகே நீ கண்டாயோ?
வானெங்கும் வட்டமிடும் வெண்ணிலவே கண்டாயோ?
தேனெடுக்க சுற்றிவரும் சின்னவண்டே கண்டாயோ?
மூடியுள்ள கண்ணுக்குள்ளே மோகனமாய் சிரித்திடுவாள்!
நாடியென்றன் நெஞ்சுக்குள்ளே நர்த்தனங்கள் புரிந்திடுவாள்!
கண்திறந்து பார்த்துவிட்டால் கணத்தினிலே மறைந்திடுவாள்!
மனம் மயங்கும் வண்ணக்கண்ணாள் யாரும் அறியாமல் என்
மனதிற்குள் வந்திடுவாள் மனதில் மாயம்பல புரிந்திடுவாள்!
ஆடும்மயில் கண்டாலோ அவள் நினைவே வருகுதடி;
பாடுங்குயில் குரலினிலே அவள் குரலே ஒலிக்குதடி;
கார்மேகம் கண்டாலோ அவள் கூந்தல் அழகு தெரியுதடி;
பார்புகழும் அவள் நினைவே மார்த்துடிப்பாய் ஆச்சுதடி;
கால்கடுக்க சுற்றிவரும் காற்றே நீ கண்டால் சொல்லு…
கடலேறி விளையாடும் அலையே நீ கண்டால் சொல்லு…
ஊருக்கெல்லாம் ஒளிகொடுக்கும் சூரியனே கண்டால் சொல்லு…
பாருக்குள்ளே மணியாம் என் கண்மணியைக் கண்டால் சொல்லு!
கண்ணாளன் இங்கேதான் காத்திருக்கான் என்று சொல்லு!
என் கண்மணியைக் கண்டாலே அவள் காதோரம் போய்ச் சொல்லு!
என்னிதயம் அவளிடத்தில் இருக்குதெனப் போய்ச் சொல்லு
- முனைவர் சி.சேதுராமன், புதுக்கோட்டை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.