பொன்னான தருணங்கள்

பத்துப் பதினைந்து பாலைவன
ஆண்டுகளுக்குப் பிறகு...
அவளை அவன் பார்க்க நேருகிறது.
எங்கெனில்...
ஒரு பேருந்து நிலையத்தில்.
எப்போதெனில்...
ஒரு நள்ளிரவில்.
எதிரெதிர் திசையில் செல்லும்
பேருந்துகள் இளைப்பாறிக்
கொள்ளும் அந்தச்
சிறிய இடைவெளியில்...
பேருந்துகளின் எதிரெதிர் இருக்கைகளில்
பழகிய பழைய கண்கள்
நான்கு பார்த்துக் கொள்கின்றன.
அப்பொழுது-
மனதில் எத்தனை எத்தனை
பூகம்பங்கள்! மனதில்
எத்தனை எத்தனை மின்னல்கள்!
உன்னைப் பார்த்த
ஒரு நிமிஷத்தில்
என் கண் இமைகளைக்
காணாமல் போய் விட்டன
கண்கள் மட்டும் அப்படியே
உன் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தன...
நீதானா? இல்லை-
வேறொருவன் கண்களால்
நான் பார்க்கிறேனா?
அல்லது மனப்பிராந்தி
என்று சொல்வார்களே அதுவா...?
என் மனப் பரப்பெங்கும்
பீச்சியடிக்கும் ஒரு
பெரிய பிரளயப் பிரவாகம்.
என் இதயத்தின் ஆழத்தில் கிடந்த
பழகிய உன்முகம் நினைவுகளில்
மிதந்து மிதந்து மேலே வருகிறது...
ஓ!
ஆண்டுகள் எத்தனை எத்தனையோ...
வழிந்து நம்மைக் கடந்த பிறகும்...
என் மார்பு தடவும்
அதே உன் பார்வை...
அதே நீ!
என் பார்வையைப் பழகிய
பழையவளே!
என்றும் என்
கனவுகளில் அலையும்
ஒற்றை மேகமே!
உனக்கு நினைவுக்கு வருகிறதா...?
உன் நினைவுப் பரண்களில்
நான் எத்தனையாவது பரணில்
இருக்கிறேன்?
இதனை நீ... அறிவாயா?
என் மீசைக்கும்
என் காதலுக்கும்
ஒரே வயதென்று
அறிவாயா?
உன் பெயரை மறக்கடிப்பதில்
தூக்க மாத்திரை கூடத்
தோற்றுப் போனதே!
ஓ!
நீ மாறியிருக்கிறாய்.
உன் புருவ அடர்த்தி
கொஞ்சம் குறைந்திருக்கிறது.
உன் சிவப்பில் கொஞ்சம்
சிதைந்திருக்கிறது
உன் இதழ்களில் மட்டும்
அதே பழைய பழச்சிவப்பு
இப்போதும் நாம்...
பேசப் போவதில்லையா?
வார்த்தைகள் இருந்தபோது
பிரிந்து போனவர்கள்
ஊமையான பிறகு
சந்திக்கிறோமா...?
உன் நினைவுகள்
உன் கணவனைப் போலவே
உறங்கியிருக்கலாம்.
ஆனால் என் நினைவுகள்
உன்னைப் போலவே
எப்போதும் விழித்திருக்கின்றன.
ஓ!
இந்தப் பேருந்தின் வெளிச்சம்
நீ
அழுவதாய் எனக்கு
அடையாளம் சொல்கிறதே!
வேண்டாம்! அழாதே..!
உன் விழியில் ஒழுகும்
வெந்நீரால் உன்
மடியில் உறங்கும்
உன் கிள்ளையின் உறக்கத்தைக்
கெடுத்து விடாதே!
இதோ
நடத்துநரின் விசில் சத்தம் கேட்கிறது
நம்மில் ஒரு வண்டி
நகரப் போகிறது...
ஆனாலும் என் மனம்
உன்னைவிட்டு நகர மறுக்கிறது...
இருப்பினும் நான்...
போய் வருகிறேன்!
அல்லது நீ போய் வா!
மீண்டும் எப்போதாவது
சந்திப்போம்!
விதியை விடவும் நான்
பேருந்தையும்
உன் மீது வைத்திருக்கும்
களங்கமற்ற காதலையும்
உண்மையாய் நம்புகிறேன்...
அப்போது உன்னைப் பார்த்து
எப்போதும் நான் கேட்க
நினைக்கும்
ஒரே ஒரு கேள்வியைத்தான்
திரும்பத் திரும்ப நான் கேட்பேன்!
“அன்பே... என்னைப் போன்று
நீயும் என்னையே
நினைத்துக் கொண்டிருந்தாயா...?
நான் உன்னை மனதார
விரும்பியதைப் போன்று
நீயும் என்னை மனதார விரும்பினாயா...?”
அன்று
உன் மடி நனைத்த
உன் கண்ணீர்த் துளிகள்...
என் மனதையும் கரைத்துவிட்டது...
என்னவளே... நீ அழுவதை நிறுத்து...
அடுத்த பிறவியிலாவது...
ஆண்டவன் நம்மைச் சேர்த்து வைப்பான்...!
உன்னைச் சந்தித்த
இந்தத் தருணங்கள்
வாழ்வின் பொன்னான தருணங்கள்...
அவை எப்போதும் என்மனதில்
மினுமினுத்துக் கொண்டே இருக்கும்...
அவை உதிர்ந்து உலர்ந்துவிடாது...
உயிரோடு ஒட்டிக் கொண்டே இருக்கும்...
- முனைவர் சி.சேதுராமன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.