பயமா இருக்குடா நண்பா...
எல்லாப் பிறந்தவளும் நினைக்கிறோம்
எல்லாத் தாயும் நம்புகிறோம்
எல்லா மகளும் மனைவியும் சொல்கிறோம்
“என் வீட்டு ஆம்பளைக புனிதம்” என்று.
வீட்டுக்கு வெளியே வெறி கொண்டலையும்
எருமை போல உரசும்
விழியால் தின்று விரல் கொண்டு தடவும்
“அவர்கள்”
எங்கிருந்து வருகிறார்கள்?
நண்பா! பயமாயிருக்குடா
கையில் ஆயுதம் வைத்திருக்கிறாயா?
ஏதேனும் முகமுறிவில் உன்னுடன்
பேசாமல் போனால் அமிலத்தால்
குளிர்விப்பாயா?
சந்தர்ப்பம் இதுவென்று
பேருந்துகளில்
நசுங்கிவரும் பெண்ணை உரசியதும்
வெறிகொண்டு விடுவாயோ?
மரங்களை விலங்குகளை
மண்ணைத் தொடர்ந்து
பெண்ணை வேட்டையாடி
மதுவின் மீது பழியிட்டு
நீ புனிதனாவாயா?
அன்பும் நம்பிக்கையுமாய்
என் குழந்தையென நட்பில்
ஆவல் கொள்கிறோம் நண்பா!
திமிறெடுத்த குறிகள் நிரம்பிக் கிடக்கும்
பூமியில்
பெண் குழந்தைகளை மடியில்
ஒளித்தபடி
எந்தப் பதுங்கு குழிக்கு
நாங்கள் போவது?
என் அண்ணனும் தம்பியும்
அப்பாவும்
ஆருயிர் நண்பா
நீயுமிருக்கும்
இந்தப் பூமியைவிட்டு?
- கலை இலக்கியா, வீரபாண்டி, தேனி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.