பசுத்தோல் போர்த்திய புலி
அலுவலகத்தில்...
அவமானப்படுத்தினாலும் அழகாய்ச் சிரிக்கிறேன்...
அனைவரையும் தட்டிக்கொடுத்து வேலை வாங்குகிறேன்...
அணி ஒருமைப்பாட்டை அழுத்தமாய் உரைக்கிறேன்...
உடனுழைப்பவரின் இன்பதுன்பத்தில் உடனிருக்கிறேன்...
வாரம் ஒரு திட்டமாய் ஒன்று கூடி மகிழ்கிறேன்...
வாடிக்கையாளர்களிடம் இனிமையாய்ப் பேசுகிறேன்...
வீட்டில்...
மனைவியின் சிறு தவறைக் கூட மன்னிக்காமல் திட்டுகிறேன்...
அனைவரையும் திட்டித் திட்டிக் கட்டுப்படுத்துகிறேன்...
அண்ணன் தம்பிகளிடம் கருத்து வேறுபாடு கொள்கிறேன்...
உடன்பிறந்தோர், உறவினரை விட்டு ஒதுங்கியே நிற்கிறேன்...
பல வருடங்களாய்ப் பெற்றோரைப் பார்க்கச் செல்லாமலிருக்கிறேன்...
மகன், மகளின் மழலைப் பேச்சைக் கேட்காமல் தவிக்கிறேன்...
இப்படியே...
அலுவலகத்திலும், வீட்டிலுமாய்
இரட்டை வேடமிடும் என்னை
எப்படி அழைக்கலாம்...?
"பசுத்தோல் போர்த்திய புலி"
எப்படி வேண்டுமானாலும் அழைக்கட்டும்
என் தேவை பணம் மட்டும்...
தன்மானத்தை தராசுத் தட்டிலிட்டு
சன்மானத்தைச் சம்பளமாய்ப் பெறுகிறேன்...
இந்தப் பணமிருந்தால்
இழந்த இன்பங்கள் திரும்ப வருமா...?
சென்ற சொந்தங்கள் திரும்பி வருமா...?
- எஸ். வீரக்குமார், பெங்களூரு.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.