தீனியும் கேலியும்...
ஓய்ந்த மழையின்
துளியொன்றில்
முகம் எதிரொலிக்கிறது.
இன்னும் சற்று நேரத்தில்
நிலவு அதனுள் இருக்கும்.
அப்புறம் கொஞ்ச நேரத்தில்
காலைச்சூரியன்
அந்தத் துளியில் விழுந்துகிடக்கும்.
இந்தப் புவித்துளியில்
முகம் பார்க்கும்
பால்வீதியின் பெருஞ்சூரியன்களைப் பற்றி
சொல்லிச் சிரிக்கிறது
அசைந்த காற்றில் தலையில் சொட்டி
வேப்பிலையில் ஓடிவந்த
துளியருவி.
சாலையில் விழும் தென்னங்கீற்று
தோள்களைத் தழுவத்
தின்றுகொண்டேயிருக்கிறது
ஆடு வெட்டுப்படும்போதும்...
- கலை இலக்கியா, வீரபாண்டி, தேனி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.