பூகம்பம்...!
அன்பெனும் ஆசை உந்தியில்
கருவாக உனைச் சுமக்கிறேன்
நீயோ பூகம்பமென வெடித்து
நிம்மதிக் கருவைக் கலைக்கிறாய்...!
மனதில் ஊறிய காதல்
கசந்ததென்ன அன்பே
மணநாணேற்றிய நாள்தொட்டு
கண்ணீரைப் பரிசாக்கியதேன் சகியே!
கள்ளம் கண்டதாக
சந்தேக அனலில் குளித்து
சண்டையிட்டு வெதும்பும் தேனே
கலங்கம் கற்பித்து
கலக்கத்தைத் தருவதேன் மானே!
இயற்கை சீறி நிலநடுக்கத்தால்
பிளக்கும் நிலம் போல்
இல்லத்தின் அமைதியை
வெடிக்கும் சொற்களால்
இரு கூறாக ஆக்குகிறாய்...!
பூகம்பமெனும் இயற்கை நிகழ்வு
பேரழிவு தருமென்று உணராயோ
ஆழ்மனதின் சந்தேக எரிமலையும்
ஈடில்லா நிம்மதி ஆணிவேரை அசைக்காதோ...!
சந்தேகச் சாத்தானை விழுங்கும்
எண்ணப் பூகம்பத்தில் மலர்வாயடி...!
திண்ணமாய் அன்பில் திளைத்து
சண்டை பூகம்பம் விலக்குவாயடி...!!
- நாகினி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.