அழைத்துச் செல்...!

கருவிலே அழித்திருந்தால்
நிம்மதி அம்மா நிம்மதி...
பெற்றெடுத்தாய் பெண்ணாக
வளர்த்துவிட்டாய் அழகுப் பதுமையாக!!
பதுமை என்பதால் தானோ
காமவெறி கயவன்
உடலோடு விளையாடிவிட்டான்...
உடல் சேறு கழுவி
மனம் கோவிலென மாலையிட்ட
மன்னனைக் குத்திக் காட்டும்முகமாய்
'இவ ரெண்டாம் தாரமா வந்தவ ' என்றென்னை
எள்ளி நகையாடும் உறவு...
மணந்தும் தாய்மை மலர் மலராவிடில்
'மலடி' எனும் சொல்முள் குத்தும் ஊர் உறவு...
தாய்மை மலர்ந்து ஒரு பிள்ளை
பெற்றால் 'சொத்தெல்லாம் தனியா அனுபவிக்க
வரம் வாங்கிட்டு வந்திருக்காம் போல...' என்று
என் மகனைத் தூற்றுவது போல் குத்தும் ஓர் உறவு...
இரு பிள்ளை பெண்ணாய்ப் பெற்றால்...
'பொட்டப் பிள்ளையா பெத்திருக்காப் பாரு' என்றும்
இரு பிள்ளை ஆணாய்ப் பெற்றால்...
'வீட்டுக்கு லெட்சுமி வர பொண்ணு பெத்துக் கொடுக்கத் துப்பில்ல' என்றும்
மூன்று நான்கு பிள்ளைகள் பெற்றால்
' பன்னியாட்டம் பெத்துருக்காப் பாரு'என்றும்
அம்மம்மா... குத்திக் குதறும் உறவு...
'விதவை' என்று குத்தும் பேச்சிற்குள்
சிக்கிச் சிதறும் நிலை வருமோ... ஐயோ...
நஞ்சு மனதுடையோர்
ஊர் உறவாகிப் பிஞ்சு மனதில்
நஞ்சு விதைக்காது காக்க...
கள்ளிப்பால் கொடுத்துக் கொல்லாமல் உயிரோடு சாகடிக்க
வளர்த்த நீயும் பெண்தானோ... தாயே...பேயே...
என்று... நாளை (எதிர்காலத்தில்)
நீயெனை வஞ்சிக்கும் சொல்
கேட்க மனதில் இல்லையம்மா துணிவு...
விசச் சுற்றத்தில் சுற்றி வளர
வர வேண்டாம் மகளே... ஊர் உறவு
உன் மனதில் கள்ளிப்பால் ஊற்றும் முன்னே
என் வாய் வழி ஊற்றிவிடுகிறேன் கள்ளிப்பால்...
கருவில் கரைந்து சென்றிடும் மகளே
உன்னோடு இணைந்த எனையும்
அழைத்துச் செல் வைகுண்டம்...!!
- நாகினி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.