உள்நாட்டு அகதிகளாய்...!
அழகழகாய் மாமரங்கள்
அடுக்கான தென்னை மரங்கள்
அடுத்தடுத்து நின்றிருந்த
வாழ வைத்த வாழை மரங்கள்...
என வளமாக இருந்து
எங்களை வாழவைத்த நிலங்கள்...
ஆடு மாடு மேய்த்துக்
கிடைபோட்ட மேய்ச்சல்
நிலங்கள்...
கடலைப் பயறு பயிரிட்டு
களிப்புறவே தின்று மகிழத்
திகட்டாமல் விளைவைத் தந்த
தாய்நிகர் தன்னிலங்கள்...
அடுப்பெறிக்க விறகு ஒடித்த
கருவேலங்காட்டுப்
புறம்போக்கு நிலங்கள்...
ஆங்கிலேயன்
அடிமை வர்க்கத்திற்குத்
தந்துவிட்டுப் போன
பஞ்சமி நிலங்கள்...
உழுது பயிரிட்டு
உண்டு வாழ்ந்த
உயிரை வளர்த்திட்ட
உன்னதமிகு
நன்செய் நிலங்கள்...
அனைத்தையும்
அபகரித்துக் கொண்டு
அந்நிய முதலாளித்துவம்
விளக்கம் சொன்னது
இது
கிராமத்தானை
நகரத்தானாக மாற்றும்
திட்டம் என்று...
உண்மைதான்...
கிராமத்தான்
நகரத்தான் ஆனான்
மாநகரத்து நடைபாதையில்
உள்நாட்டு அகதிகளாக...
உடலும் உள்ளமும்
மரித்துப் போக உல்லாசம் வரும்
என்று நினைத்து
உள்ள வாழ்வைத் தொலைத்துவிட்டு
உள்ளுக்குள் தன்னைத் தேடும்
உளம் நொந்து போன
உள்நாட்டு அகதிகளாய்...!
- முனைவர் சி.சேதுராமன், புதுக்கோட்டை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.