பிறந்த உறவுகள்
"எங்களப் பத்திக் கவலையில்லை
அக்கா சொகமா இருக்கணும்"
இருந்த வீட்டைக் கையகலக் காணியை விற்றுக்
கட்டிக்கொடுத்துவிட்டுப் பஞ்சம் பிழைக்கப்போனவன்.
எம் பொறந்தவன் என
நெஞ்சைத் தட்டிச் சொல்லும்போதே
இருதயத்தைப் பிடுங்கி
ஒன்றுவிட்ட தம்பியைக்
கையில் காட்டும் அழகத்தை.
ஆறு பெற்றுக் கொள்ளுப்பேரன் கண்டும்
அண்ணன் சேலை உடுத்தி
தம்பி எடுத்த சேலையில் தலை சாய்த்து
உயிர் அடங்கிய பெரியம்மா.
"யண்ணே! கோடித்துணி போட
நீ இருந்தாத்தேன் எங்கட்டை வேகும்"
அவன் உதட்டுச் சிகரெட்டைப் பிடுங்கியபடி
அண்ணனிடம் அழும் மயிலு.
"நீ வந்தாலே போதும்க்கா"
"வான்னு நீ கூப்பிட்டாலே போதும்டா"
ஆயிரம் கதைகளை இந்தக் காற்று
ஓயாமல் பேசிக்கொண்டே இருக்கிறது.
முழுப்பங்கையும் பிடுங்க
வழக்காடும் பவித்ரா
பைசா செய்யாமலே
கோடிகளை அமுக்கும் கோபி போல
"விபரம்" இல்லாமல்...
- கலை இலக்கியா, வீரபாண்டி, தேனி மாவட்டம்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.