பருவ மயக்கம்
ஒட்டுப்புல்லில் தும்பைப் பூச்சூடி
தலைமுடி அலங்கரிக்கிறேன்.
யானையின் லத்திகளைத்
தேடித்தேடி மிதித்திருந்தும்,
கால் முள்ளெடுக்க
எருக்கம்பால் தொட்டுநிற்கிறேன்.
மேற்கு மலைத்தொடரைப்
பட்டப்பெயர் சொல்லிக்
கதைபேசிக் கண் தழுவுகிறேன்.
புழுதியில் கமகமக்கும்
டயர்வண்டி ஓடிக்கொண்டே இருக்கிறது
என் வாழ் வீதியெங்கும்.
பிள்ளை வந்துவிட்டான்.
“சாப்பிட்டு வீட்டுப் பாடம் எழுதுப்பா“
குழந்தை எழுதத் தொடங்குகிறான்.
என் மேற்கு மலைத்தொடர்
கம்பளிப் புழுவெனச் சுருள்கிறது.
உணரவும் முடியாமல்
உதறவும் முடியாமல்
உள்ளங்கையில் துடி துடிக்கும்
குழந்தை இருதயங்கள்.
- கலை இலக்கியா, வீரபாண்டி, தேனி மாவட்டம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.