துயரக்கரண்டி
தென்னங்கரண்டி கொண்டு
விடியவிடியக்
காற்று கடையும் கடைசலில்
வெண்ணெய் எனத் திரள்கிறது மென்குளிர்.
“நெப்டியூனுக்கு பதினைந்தாம் நிலவாகப் போயிடட்டுமா
இந்தக் கண்ணற்ற பூமியில்
தனியே காய்வதற்கு?” வழக்கம் போல
நிலவு புலம்புகிறது.
தலைமுறை பலகண்ட அரசமரம்
கொட்டிய கூழாங்கல்லென
அலம்பிச் சிரிக்கிறது.
அமட்ட முடியாத காற்று
ஊளையிட்டுக் காதைக் கிழிக்கிறது.
ஸ்...ஸ்... இப்ப என்னவாம்?
குழந்தை விட்டுச்சென்ற பந்தும்தான்
தனியே கிடக்கிறது.
கதவடைக்க முயலும்போது
முருங்கை மரமும்தான்
ஏங்கி ஏங்கிப் பார்க்கிறது.
கொண்டாட்டத்தைத் துயர் என்றும்
துயரத்தைக் கொண்டாட்டம் என்றும்
மாற்றிக் கருதுவது தீராத பெருவியாதி.
வெட்டவெளிப் பாறையெனச்
சாவற்ற பெருவெளியின்
காதலென நாம்...!
- கலை இலக்கியா, வீரபாண்டி, தேனி மாவட்டம்.
![](http://www.muthukamalam.com/images/logo.jpg)
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.