வேண்டுதல்
வேலிக்கு வெளியே
தொங்குகிற வாழை
சாலைநெடுக நீர் வடிக்கும்
அடிமாடுகளின் லாரி.
குழந்தைக்குக் கையசைத்துவிட்டுத்
திரும்புபவளின் அங்கலாய்ப்பு,
கைபேசியைக் காதில்வைத்தபடி
கருமத்தில் ‘தானேசிக்கும்’ இளம்பெண்.
காய்க்கடையில் காசுபோதாமல்
டவுசர் பையைக் கடையும் மனிதன்,
நொடிப்பொழுதில் உடலாகிவிடும்
பைக்காரனின் வேகம்
உயிரைக் கையில் பிடித்துப்
பெண்கள் கடக்கும் டாஸ்மாக்
ஒளித்துவந்த மதுபாட்டிலோடு
விபத்தில் வெளியேறும் ரத்தம்
பூமியின் மதங்களே!
முப்பத்து முக்கோடி சாமிகளே!
இவை ஏதும் கண்ணுல படாம,
பிள்ளைக்குப் பள்ளிக்கட்டணம் கட்டித் திரும்பனும்
ரெட்டைக் கடா வெட்டிப் பொங்கலிடுவேன்
துணைக்கு வாங்க ஆத்தாக்களா...!
- கலை இலக்கியா, வீரபாண்டி, தேனி மாவட்டம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.