பேதையர்கள்

உயிருடன் இருக்கும்போது
எந்தப் பதவியும் யாருக்கும் கிடைப்பதில்லை
ஆனால் அவர் இறந்தாலோ நிச்சயம்
ஒரு பதவி உண்டு
ஒன்று சிவலோகம்
மற்றொன்று வைகுண்டம்...
சிறப்பாக வாழ்ந்த சீமான்
அன்புடனே எல்லோரும்
சீனா தானா என்றழைத்த
சிதம்பரம் இன்று
சிவலோகம் சென்றுவிட்டார்!
அந்தக் குடும்பத்தின் ஒற்றுமையும்
அவர்கூடவே சென்றுவிட்டது...!
பழங்களோ ஐந்து
அறுவருக்குப் பங்கென்றால்
சாறாகப் பிழிந்து
சமமாகக் கொடுத்திடலாம்
சொத்தைப் பங்குவைக்கும்
இயந்திர சாதனங்கள்
இன்னும் வரவில்லை...
எடிசன் மீண்டும் பிறந்தால்
எதிர்காலத்தில் அதுவும் சாத்தியப்படலாம்
மகன்கள் நால்வர்
மாப்பிள்ளைகள் நால்வர்
சொத்தால் பிரிந்தனர்...
அதுவரை ஒன்றுக்குள் ஒன்றாக
ஒற்றுமையுடன் இருந்தவர்கள்
சொத்திற்காக ஒருவரையொருவர்
பகைமையுடன் பார்த்திட்டார்...
அவர்களுக்குள்...
ஒற்றுமை உடைந்ததில்
கட்சிகள் இரண்டாயின...
காட்சிகள் பலவாயின
சீனாத்தானா நடத்திய
நூற்பாலையை மட்டும்
ஏற்பாரில்லை
ஏனென்றால் அது நட்டத்தில் ஓடியது...
இப்பவோ அப்பவோ...
அத்தொழிற்சாலை தள்ளாடி நடைபோட்டது...
ஆனால் அவரின் மற்ற சொத்துக்களுக்கு
அப்படியொரு மல்லுக்கட்டு
அவரின் வங்கிக்கணக்கும்
வைப்புத்தொகையும்
முடக்கப் பட்டன...
அசையாச் சொத்துக்கள்
நீதிமன்றத் தீர்வாளரிடம்
அடங்கி விட்டன...
அசையும் சொத்துக்களில்
ஆத்தாளைத் தவிர...
மற்றதை எல்லாம்
பங்கு வைத்தார்கள்
ஆத்தாளை வைத்துக்கொள்ள
மாதங்களைப்
பங்கு வைத்தார்கள்...
பாவம் பத்தில் சகோதரன்...
இருபதில் பங்காளி...
நாற்பதில் பிரதிவாதி...
என்கின்ற
சீமான்வீட்டுச் சட்டங்கள்
சிறப்பாக அரங்கேறின...
பகைமை முற்றியபின்பு
பழைய படங்கள் எல்லாம்
சட்டங்களை விட்டிறங்கி
பெட்டிக்குள் போயின…
எத்தனை பட்டினத்தார்
இங்கே இந்த மண்ணில் பிறந்தாலும்
காதறுந்த ஊசிமட்டும் – எப்போதும்
அவர்கள் கண்ணில் படாது!
அவர்களின் கருத்திற்கும் எட்டாது!
கண்ணும் கருத்தும் குருடாகிப் போய்விடவே
அன்பும் பண்பும் அவர்கள்
கண்களில் படவில்லை!
அவர்கள் கருத்தழிந்து போனார்கள்!
காசுக்கு அடிமையாகிப் போனார்கள்!
பத்துமாதம் சுமந்து பெற்ற
ஆத்தாளை நடுத்தெருவில்
பரிதவிக்கவிட்டார்கள்...!
ஆத்தாளை அல்லாட விட்டுவிட்டு
அவளின் அன்பு நெஞ்சில் அனலைக் கொட்டினார்கள்!
அன்பான ஆத்தாவும்
அடுத்த இரண்டு மாதங்களில்
சீனாத்தானா வழியில்
சீரழிந்து போனாளே...!
சீர்கெட்ட மகன்கள்
அவள் மீது சிரத்தை காட்டாததால்
சீர்கெட்டுப் போனாள்...
அன்பைத் தொலைத்தவர்கள்
அறிவிழந்து போனார்கள்...
அவர்கள் அன்பைத் தொலைத்த பேதையர்கள்...
பண்பில்லா மூடர்கள்...
பணப்பித்தேறி பரலோகம் செல்லக் காத்திருக்கும்
பாமரர்கள்... அவர்களுக்கும்
இந்தநிலை என்றும் உருவாகும்
அதுவும் நொடிப்பொழுதில் எப்போதும் ஓடிவரும்...!
- முனைவர் சி.சேதுராமன், புதுக்கோட்டை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.