மண்ணு எங்க சாமியே!
இந்த மண்ணு எங்க சாமியே
இது பொன்னு வெளையுற பூமியே
கரிசக்காட்டு வாசமே- எங்க
காத்துல எப்பவும் வீசுமே
ஈரமண்ணோட பாசமே-எங்க
ஆடும் மாடும் வைக்கும் நேசமே
கரட்டுமேட்டுல மயிலும் வந்தாடுமே
பனங்காட்டுல கருங்குயிலும் பாடுமே
முள்ளுக்காட்டுல காடகவுதாரி ஓடுமே
புல்லுக்காட்டுல ஆடுமாடும் மேயுமே
கள்ளிக்காட்டுல குருவியெல்லாம் பேசுமே
நெல்லுக்காட்டுவேலியிலே ஓணான் உற்றுப்பார்க்குமே
விசக்கள்ளியும் இங்க வளர்ந்திடுமே
பாசத்தேனை பூவும் தந்திடுமே
நெல்லுப்பயிரும் வளர்ந்திடுமே-கூட
புல்லும் சேர்ந்து வளர்ந்திடுமே
வரப்பும் உள்ள மறைஞ்சிடுமே
பார்க்க மனசுமிங்க நெறஞ்சுடுமே
கெழக்கே ஓடும் ஓடையும்
எங்க கம்மாயில கலக்குமே
கம்மாயத்தான் தெறக்கும்போது
குட்டிமீனெல்லாம் துள்ளுமே
துள்ளும்மீனப் பிடிக்கத்தானே
கொக்கு அங்க நிக்குமே
இந்த மண்ணு எங்க சாமியே
இது பொன்னு வெளையுற பூமியே
- விஜயகுமார் வேல்முருகன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.