அரசியல் துளிகள்
அரசியல்
தலைவர்கள்
உருவாக்கப்படுவதற்காக
எருவாக்கப்படும்
இளைஞர்கள்
*****
தலைமை
எல்லா
இளைஞர்களையும்
எத்தனையோ
தேர்வுகளை
எழுத வைக்கிறார்கள்
எழுதவே தெரியாத
எங்கள்
தலைவர்கள்
*****
தினந்தோறும்
கடை
இடை
தொடை
சடை
முடை
உடை
தினந்தோறும்
தேர்தல்கள்
*****
அடக்கம்
அடக்கம்
முதல்வருள் உய்க்கும்
அடங்காமை
ஆட்சியைக்
கவிழ்க்கும்
*****
உபதேசம்
கடமையைச்
செய்
பலனை
எதிர்பார்க்காதே
கட்சித்
தொண்டர்களுக்குக்
கரைவேட்டி
உபதேசம்
*****
ஆட்டம்
கரகாட்டம்
ஒயிலாட்டம்
மயிலாட்டம்
எல்லாவற்றையும்
மிஞ்சும்
எங்கள்
தலைவர்களின்
பித்தலாட்டம்
*****
விகிதம்
ஒரு
நாள் மட்டும்
ஊதியம்
கொடுத்துவிட்டு
ஓராயிரம் ஜென்மம்
உழைக்க
வைக்கும்
வேட்பாளர்
*****
விலை
தேர்தலுக்குத்
தேர்தல்
அன்பளிப்பு
அதிகரிக்கையில்
இவர்கள்
எப்படி
விலைவாசியைக்
குறைக்கப் போகிறார்கள்?
- சுப.தனபாலன், திண்டுக்கல்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.