காதலைச் சொல்லும் முன்...

கண்ணோடு கண் பேசி
வாய் மொழி அலங்கரித்து
ஆயிரம் கனவுகள்
நினைவுகளாகி காதல் நயம்
சொட்டச் சொட்ட மடல் எழுத்தாகி
வாய் மனம் பரிமாறி இதயம் இடம்மாறி
மனத் துள்ளல் தந்து காதல்
இல்லற மணவாழ்வாய் மலருமென
நம்பிக்கை தந்து
உயிர் மனம் கலந்து
அங்கங்கே உடல் உரசல் செய்து
இன்பம் நாடி கூடி
ஆனந்தப் பரவசத்தில் ஆடித் திளைத்த பின்
இல்லத்தில் மணநாள் பார்க்கும் தருணம்
காதலவரை நோக்கி...
பெற்றோரை / குடும்பத்தை எதிர்த்து
என்னால் எதுவும் செய்திட இயலாதென
சொல்லிப் பிரிவு தோல்வி தழுவும்
கோழைத்தனமான காதல் பெரிதா?
ஒருவரையொருவர் பார்த்து
கண்கள் கலந்து
மணவாழ்வாய் மலர்ந்தால்
பிறவிப்பயன்அடைந்த இன்பம் பிறக்குமென
இருமனமும் ஒன்றாய் நினைத்தும்
வாய்வார்த்தையில் காதல் சொலும் முன்
குடும்பச்சூழல் குடும்பத்தை எதிர்க்கும் சுயதிறன்
சிந்தித்து நாணித் தலைகுனிந்து மௌனமாகி
உள்ளக் காதலை வெளிப்படுத்தாது
உள்ளுக்குள் பூட்டிச் சிதறடித்து
தோல்வியாகிப் போன தெளிந்த
சிந்தனை கோழைத்தனக் காதல் பெரிதா?
இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்யத்
தெளிவாய்த் தீர்மானித்து விடு...
மனதோடு கலந்தவரை
எந்தத் தடை குறுக்கிட்டாலும்
எதிர்த்து மணமலர் சூடி
இணைபிரியாது வாழ இயலுமெனில்
வாய்பேசி காதலில் திளைத்திடு...
குடும்பப் பின்னணி உள்ளிட்ட சுயஇயல்பை
மீறுதல் இயலாதெனில்
மௌனித்துக் காதலை
மனதில் புதைத்து உனக்குள்
தோல்வியா(க்)கி விடு...
எல்லாம் யோசித்துப் பிறப்பதல்ல காதல் என
வாய்மொழிவாய் எனத் தெரியாத எனக்கு...
உன் கூற்றும் சரிதான்
எதையும் யோசித்துப் பிறப்பதல்ல காதல்... ஆனால்
எதையும் யோசிக்காமல் காதல் ஆற்றில் இறங்கிய பின்...
குளித்தல் குடும்பத்திற்கு ஆகாதென பின்வாங்குதல் சரியா?
மனதில் பூத்த காதலை வெளிப்படுத்தும் முன்
பின்புலக் காரணிகளை யோசித்து மௌனித்தல் சரியா?
மனக்காதலை உரியவரிடம்
வாயால் சொல்லும் முன்
தம் சுயநிலை யோசித்து
குடும்ப உறவுகளை மனம் நோகடிக்காத
தனக்கு மட்டுமே துயராகிப் போகும்
மௌனத் தோல்வி தழுவும் காதலே
உயர் தெய்வீகக் காவியக் காதல்!
குடும்பத்தை, சமூகத்தை எதிர்த்து,
குடும்ப உறவுகள் மனம் நொந்தாலும்
உற்றார் உறவுகளை உதறி
மனதில் நினைத்தவரோடே
காலமெலாம் வாழ்வேன் எனும் துணிவு
நெஞ்சிற்கொண்டு வளர்ந்து வென்ற காதல்
சமூகமாற்ற வித்தாம் வாழ்க்கைக்காதல்!
சமூக மாற்ற வித்தாம் வாழ்க்கைக்காதல்
நம்மால் பின்பற்ற இயலுமா என்று யோசித்தே
மனக்காதலை வெளிப்படுத்தென
அறிவுறுத்தவே எழுத்தாணி பிடித்தேன் இளைஞனே!!
- நாகினி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.