உன்னுள் கரைதல்...!

நான் பயணிக்கும்
ஒவ்வொரு பயணத்திலும்
நீயே என்னுடன் பயணிக்கிறாய்
என் பயணங்கள் எப்போதும்
உன்னுடன் சேர்ந்தே அமைந்துவிடுகின்றன...
எழுதுகிறேன்...
நான் எழுதும்போதும்
நீதான் எழுதுகிறாய்!
ஆம்! நீ என்
எழுதுகோலாக அல்லவா
இருந்து என்னை இயக்குகிறாய்...
எழுதிக் கொண்டு இருக்கின்றேன்...
எழுத்துக்கள் பல வடிவமெடுக்கின்றன...
தாகம் எடுக்கின்றது...
தாகத்தைத் தணித்துக் கொள்வதற்காக
அருகில் பார்க்கிறேன்
அங்கு...
நீ தண்ணீர்ப் பாட்டிலின் வடிவில்...
என் தாகத்தைத் தீர்க்கின்றாய்...
மனம் பெண்டுலம் போல்
அங்கும் இங்கும் ஊசலாடிக் கொண்டே இருக்கிறது...
எதையாவது சற்றுக் கூர்ந்து பார்த்தால்
மனம் அதில் லயிக்கும்
என்று கருதுகிறேன்...
என் கண்கள் துலாவுகின்றன...
அருகில் நீ படமாக இருந்து
என் மனச் சோர்வைப் போக்குகிறாய்...!
படத்தைப் பார்க்கும் எனக்குப்
பலப்பல பழைய நினைவுகள்
மனதில் பவனி வருகின்றன...
மனதில் புதிய உற்சாகம் பீறிட...
மீண்டும் என் பணியைத் தொடர்கிறேன்...
மாலைப்பொழுது என்னை
மலைக்க வைத்து வேடிக்கை காட்டுகிறது...
எதையாவது கொறித்தால்
மலைப்புப் போகும் என்று கருதுகிறேன்...
எது தற்போது இருக்கிறது...
தேடித்தேடிப் பார்க்கிறேன்...
என் எதிரில் நீ பதார்த்தங்களை
எடுத்து நீட்டுவதுபோல்
உன்னுடைய தின்பண்டங்கள்...
அதனை எடுத்து உண்கிறேன்...
உடலுக்கும் உள்ளத்திற்கும்
இதமாகவும் பதமாகவும் இருக்கிறது...
உள்ளத்தில் உற்சாகம் பிறக்கிறது...
வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும்
உன்னுடனே பயணிக்கிறேன்...
இந்தப் பயணத்திலேயே உன்னுள் கரைந்து
நீயாகவே மாறிவிட
என் மனம் நினைக்கின்றது...
என்னுள் நீயும் உன்னுள் நானும்
கரைந்துவிட வேண்டும்...
நீ யார்... நான் யார்...
என்று பிரித்தறிய முடியாத நிலை...
ஆம்... நீயே நான்...! நானே நீ...
அதுதான் ஜீவன் கலக்கின்ற இடம்...
அது தேடலில் கிடைக்கின்ற
உன்னத நிலை...
- முனைவர் சி.சேதுராமன், புதுக்கோட்டை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.