முதலீடு
உள்ள வருமானத்தை
உலகப் பள்ளிக்குக் கட்டிவிட்டு
அந்நிய முதலீட்டில்தான்
குடும்பத்தை ஓட்டுகிறேன்.
சாப்பாட்டுக்கு அவர் முதலீடு
சந்தோஷமா சாப்பிடலாம்.
கழிப்பறை குளியலறை இவர் முதலீடு
வசதியா சொகமா வாழலாம்.
வீடு கட்ட இவுக முதலீடு
நம்ம சொந்த வீடு நமக்குக் கிடைக்கும்,
சாவிய மட்டும் அவங்களுக்கு கொடுத்துரணும்.
தோட்டம்போட அவுக முதலீடு
விதை, உரம், தண்ணீர் உட்பட
அவங்ககிட்டயே வாங்கிக்கலாம்.
வௌச்சல அவுகளே நேர
வந்து வாங்கிக்குவாக
நாம முதலாளியா காலாட்டிக்கிட்டு உக்கார்ந்துக்கலாம்.
இடம், ஆறு, கொளம், மலைன்னு
வெறும் இடத்தை மட்டும்தான் அவுக வாங்கிக்குவாக
நாம நாயமா கொடுத்துரணும்.
காக்காசுக்கு நம்பாத உலகத்துல
இம்புட்டு ரூவாய முதலீடுன்னு குடுத்து உதவுறவுகளுக்கு
அஞ்சு வட்டி என்ன பத்துவட்டி குடுத்தாலும் செல்லும்.
குடும்பம் முன்னேறனும்ன்னா
அந்நிய முதலீடு இல்லாம
என்ன செய்யமுடியும்?
முன்னேற்றம் ரொம்ப முக்கியம்
- கலை இலக்கியா, வீரபாண்டி, தேனி மாவட்டம்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.