எதிர்பார்ப்பு

இறுக்கிக்கட்டிய சரமாய்
தொடுத்தபின்னும்
மணம்பரப்பும் மலர்போல
அடக்கிப்பின்னலிட்டும்
அடங்கமறுக்கும்
முன் உச்சிமுடிபோல
குடம்குடமாய் நீர்விட்டும்
மழையை விரும்பும்
மலர்ச்செடிபோல
எத்தனையோ மனிதர்கள்
அருகில் இருந்தும்
தொலைதூரத்திலிருக்கும்
உன்னையே எதிர்பார்க்கும்
என் மனசு...
பசியால் வாடி வருந்தி உணவிற்காக
ஏங்கித் தவிக்கும் குழவி போன்றும்...
கதிரவனின் கடுமையான வெப்பத்ததைத்
தாங்காது வாடி வதங்கிக் கொண்டிருக்கும்
பயிர்கள் வானத்தின் அமுதத் துளியை
எதிர்பார்ப்பது போல...
வாளால் அறுத்தாலும் அதனைப் பொறுத்துக்
கொண்டு தனது நோய்தீர்க்க
மருத்துவனையே நம்பி எதிர்நோக்கும்
நோயாளி போல...
தாய் தன்னை அடித்துத் துன்புறுத்தினாலும்
அதனைப் பொறுத்துக் கொண்டு
தாயின் காலடியையேச் சுற்றிச் சுற்றி வரும்
குழந்தை போல...
எத்தனை சோதனைகள் வந்தாலும்
அவற்றையெல்லாம் பொறுத்துக் கொண்டு
தனக்கு அருள்புரிய வேண்டும்
என்று இறைவனையே எப்போதும் நாடும்
அடியாரைப் போல...
எப்போதும்... உன்னையே...
என் மனம் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும்...
அதில் என் காதல் தோய்ந்திருக்கும்...
- முனைவர் சி.சேதுராமன், புதுக்கோட்டை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.