புலிகள் தீர்ந்துபோவதில்லை
செடிகளில் பூத்த யானையாக
அருகம்புல் பூ.
கொலுசொலிக்க ஓடும்
சிறுமியின் காலடிச் சப்தம்
செருப்பின் குரலாய்
தேய்ந்து மறைகிறது.
மிதிவண்டியின் முனகலோடு
கடந்து செல்கிறான்
பருவ வயதுச் சிறுவன்
ஒரு சாரலைப்போல...
மெல்லிய மெழுகு வெளிச்சமாய்
இருட்டைப் பரப்பியபடி
சூரியன் எங்கோ மறையும்
மழைநேரத்துப் பகல்.
நியாயங்களுக்கான தடயங்களும்
பலன்களும் ஆதரவின்றி
நீர்வட்டங்களைப் போல
இணைந்து கிழிந்தழிகிறது.
பாதிப்பு எத்தனை பெரிதெனினும்
வெறிநாய்களின் தேசத்தில்
புலிகள் தீர்ந்துபோவதில்லை.
- கலை இலக்கியா, வீரபாண்டி, தேனி மாவட்டம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.